புதுச்சேரி மாநிலத்தில் கடுமையான நெருக்கடிகளையும் தாண்டி மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது - ஓசூரில், வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் பேட்டி


புதுச்சேரி மாநிலத்தில் கடுமையான நெருக்கடிகளையும் தாண்டி மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது - ஓசூரில், வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் பேட்டி
x
தினத்தந்தி 31 Dec 2020 2:35 PM GMT (Updated: 31 Dec 2020 2:35 PM GMT)

புதுச்சேரி மாநிலத்தில் கடுமையான நெருக்கடிகளையும் தாண்டி மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஓசூரில் தெரிவித்தார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், 2-வது சிப்காட் வளாகத்தில் "குரோமோர் பயோடெக் " என்ற திசு வளர்ப்பு முறையில் வாழை, முள்ளில்லா பீமா மூங்கில் போன்ற புது ரகங்களை உருவாக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ரகங்கள் நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் முள்ளில்லா பீமா மூங்கில் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில், நேரில் பார்வையிட்டு தெரிந்து கொள்ள புதுச்சேரி மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று ஓசூர் வந்தார். அவருக்கு, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என்.பாரதி, முள்ளில்லா பீமா மூங்கில் தொழில்நுட்பம் மற்றும் பயன்கள் குறித்து விரிவாக விளக்கி கூறினார். பின்னர், அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் சிறந்த நிர்வாகத்தை வழங்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் எங்களுக்கு கடுமையான நெருக்கடிகள் இருந்து வருகிறது. முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அதையும் தாண்டி, மாநில மக்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. நிதி வருவாய் மிகக்குறைவாக இருந்த சூழ்நிலையிலும் கூட, தொடர்ச்சியாக, மக்கள் நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், புதுச்சேரியில் மட்டும் ரேஷன் கடைகள் இல்லாத நிலையை ஏற்படுத்தி வைத்திருப்பது, வருத்தம் தரும் விஷயம் ஆகும். ஓசூர் குரோமோர் பயோடெக் நிறுவனத்தில், திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் புது ரக முள்ளில்லா மூங்கிலை, புதுச்சேரி மாநிலத்தில் அறிமுகப்படுத்தும் நோக்கில், அதுகுறித்து தெரிந்து கொள்ள வந்துள்ளேன். இது தொடர்பாக, குரோமோர் பயோடெக் நிறுவனத்தினர் மற்றும் புதுச்சேரி மாநில உயர் அதிகாரிகள், விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் விரைவில் நடத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அப்போது புதுச்சேரி மாநில வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சிவராமன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் குமாரவேல், குரோமோர் பயோடெக் நிறுவன பொது மேலாளர் பன்னீர் செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story