வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும் - ஜி.கே.மணி பேட்டி


வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும் - ஜி.கே.மணி பேட்டி
x
தினத்தந்தி 31 Dec 2020 3:35 PM GMT (Updated: 31 Dec 2020 3:35 PM GMT)

வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும், என ஜி.கே.மணி கூறினார்.

சேலம்,

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்று 20 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் நேற்று ஊர்வலமாக சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு கடந்த 40 ஆண்டு காலமாக போராடி வருகிறோம். சென்னையில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தொடங்கிய போராட்டம் தற்போது தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராகவோ அரசியல் கட்சிகளுக்கு எதிராகவோ நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. வன்னியர்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறோம். தேர்தல் விரைவில் வர உள்ளதால் காலதாமதம் செய்யாமல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளரை அறிவித்துள்ளனர். ஆனால் எங்களுடைய நிலைப்பாட்டை தேர்தலுக்கு முன்பு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார். தற்போது நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளோம். இடஒதுக்கீடு போராட்டத்திற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. இது எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாகும்.

ரசிகர்களின் அழுத்தம் காரணமாகவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். தற்போது அவரது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். மீண்டும் ரசிகர்கள் அழுத்தம் கொடுத்தால் அரசியலுக்கு வரலாம். இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த போராட்டத்தை தி.மு.க. கொச்சை படுத்துவது மிகவும் கண்டனத்துக்குரியது.

இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

முன்னதாக நடந்த போராட்டத்தில் பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் அருள், பசுமைத்தாயகம் மாநில இணைச் செயலாளர் சத்ரிய சேகர், மாநில துணைச்செயலாளர் ஆனந்தராஜன், மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், ஏழுமலை, மாவட்ட சிறப்பு செயலாளர் சேகர், மாநில துணை அமைப்பு செயலாளர் சரவணன், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் வெங்கடாசலம், மாவட்ட இளைஞர் சங்க துணைத் தலைவர் விஜி, மாவட்ட அமைப்பு செயலாளர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story