வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு தண்ணீர் வராத நிலை: நீர் வரத்து ஓடைகளில் உள்ள தடுப்பு சுவர்களை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்
வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லாத நிலை உள்ளதால் நீர் வரத்து ஓடைகளில் உள்ள தடுப்புச் சுவர்களை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ளது வடமலைக்குறிச்சி கண்மாய். இந்த கண்மாய் நிரம்பினால் சுமார் 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும்போது மலை அடிவாரப்பகுதிகளில் இருந்து இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரும். குறிப்பாக, ரெங்கர் கோவில் பகுதி மற்றும் திருவண்ணாமலை மலையடிவாரத்தில் உள்ள சின்னக்கல் ஓடை, வெள்ளக்கல் ஒடை ஆகிய 3 ஓடைகளில் இருந்தும் மழைநீர் வந்து இந்த கண்மாய் நிரம்புவது வழக்கம்.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததாலும் இந்த வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு தண்ணீர் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரும் பாதையில் உள்ள ஓடைகளில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதால் குறைவான அளவு தண்ணீரே கண்மாய்க்கு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு தண்ணீர் வரும் ஓடைகளில் உள்ள தடுப்பு சுவர்களை அகற்ற வேண்டும். மேலும் நீர்வரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பேயனாற்று படுகையில் இருந்து வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு 121 கன அடி தண்ணீரை பகிர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடமலைக்குறிச்சி கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார், திருப்பதி, பழனிக்குமார், சுந்தரம், மற்றும் பாசன விவசாயிகள் ஏராளமானோர் கலந்து ெகாண்டனர்.
Related Tags :
Next Story