பணம் கொடுத்து ஓட்டு வாங்க மக்களை ஏழ்மையாகவே வைத்துள்ளனர் - கமல்ஹாசன் பேச்சு


பணம் கொடுத்து ஓட்டு வாங்க மக்களை ஏழ்மையாகவே வைத்துள்ளனர் - கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 31 Dec 2020 5:47 PM GMT (Updated: 31 Dec 2020 5:47 PM GMT)

பணம் கொடுத்து ஓட்டு வாங்க மக்களை ஏழ்மையாகவே வைத்துள்ளனர் என கமல்ஹாசன் பேசினார்.

சிவகங்கை,

வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மதுரையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தற்போது அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்த கமல்ஹாசன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு வந்தார்.

திருப்பத்தூரில் அவர் பேசுகையில், நான் செல்லும் இடமெல்லாம் அன்பு பொங்கி வழிகிறது என்பது நான் செய்த பாக்கியம். மாற்றத்திற்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. அதை செய்து காட்டுவோம். மக்களின் ஆட்சி மலர வேண்டும் என்றால் நீங்கள் மக்கள் நீதி மய்யத்தின் கையை வலுப்படுத்த வேண்டும். நாங்கள் நல்ல திட்டங்களுடன்,. நேர்மையுடன் உங்களை அணுகுகிறோம். இந்த வார்த்தையை உபயோகிக்க கூட அவர்கள் யோசிப்பார்கள். நேர்மை என்பது தான் எங்கள் பலம். அது நமது பலமாக மாற வேண்டும் என்பதுதான் என் ஆசை. உங்கள் ஓட்டு என்பது அது உங்களின் உரிமை. அதை கடமை என்று நினைத்து நீங்கள் செய்தாக வேண்டும். அப்படி செய்தால் நேர்மையை நோக்கி நீங்கள் நடைபோட்டால் நாளை நமதே, நிச்சயம் நமதே என்று பேசினார். இதையடுத்து அவர் சிவகங்கை சென்றார்.

சிவகங்்கையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசினார். அப்ேபாது அவர் கூறியதாவது:- சிவகங்கையின் சரித்திரத்தை தொட்டால் வேலு நாச்சியார் பெயர் நினைவுக்கு வரும். தியாகத்திற்கு பெயர் பெற்ற பெண்கள் பலபேர் இருந்த ஊர் இது.

ஆனால் இன்று இங்கு மணல் கடத்துகின்றனர், மரங்களை வெட்டுகின்றனர். இதை மாற்ற நாம் வரவேண்டும். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் சிவகங்கையை தேர்வு நிலை நகராட்சியாக மாற்ற வேண்டும் என்ற வெகுநாள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

பெரியாறு பாசனநீர் சிவகங்கை மாவட்டத்திற்கு முறையாக திறந்து விடப்பட வேண்டும் என்பதை செயலாக மாற்றி காட்டுவோம். அது மட்டும் அல்ல சுற்றியுள்ள கிராமங்களில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதற்கான வித்து பரமக்குடியில போட்டாகிவிட்டது. அங்கு தொழில் முனைவோர் மையம் ஒன்றை தொடங்கி கொண்டு இருக்கிறோம். அதன்மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு உண்டு. மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது. அதை மகளிர் நினைத்தால் மாற்றிக்காட்டமுடியும்.

விவசாயி என்ற பட்டம் ஆண்களுக்கு மட்டும் பொருந்தாது பெண்களுக்கும் அந்த பட்டம் கொடுக்கப்பட வேண்டும். அப்படிபட்ட அதிகாரம் உங்களுக்கு அரசு மூலமாக கிடைக்க வேண்டும். வேலையின்மை, கல்வியின்மை என்பது நாம் உருவாக்குவது தான் ஏழ்மை என்பதும் அப்படிதான். ஏழ்மையை வெகு ஜாக்கிரதையாக இவர்கள் காப்பாற்றிவைத்துள்ளனர். ஏழை இல்லாமல் போனால் பணம் கொடுத்து ஓட்டை வாங்க முடியாது. உங்கள் ஏழ்மை உங்கள் கைகளை நீட்டிவாங்க சொல்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களை ஏழ்மை கோடு அல்ல, செழுமை கோட்டிற்கு மேலே கொண்டு வருவோம். இது செய்ய கூடிய ஒன்றுதான். ஆனால் அனைவரும் கூடி தேர் இழுக்க வேண்டும். விவசாயத்தில், விண்வெளியில் அனைத்திலும் சம்பளம் உள்பட சம உரிமை வேண்டும்.

இதை உங்கள் கட்சியாக நினைத்து மக்களாட்சியை மலர செய்ய வேண்டும். உங்கள் கணவரை, பிள்ளைகளை மக்கள் நீதி மய்யத்திற்கு கொண்டு வாருங்கள். பணம் கொடுக்கும் கட்சி எதையாவது செய்து வெற்றி பெற நினைப்பார்கள், நாங்கள் வெற்றி பெற்று விட்டு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கான பல திட்டங்கள் உள்ளன.

ஒரு காலத்தில் வெள்ளையனே வெளியேறு என்றனர். தற்போது நாம் கொள்ளையரே வெளியேறு என்று சொல்கிறோம். மக்களும் மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர்். எங்களை உங்கள் மனதில் பதிய வையுங்கள். ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே, வெற்றி நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மக்கள் நீதி மய்ய நிர்வாகி ஒருவரின் குழந்தைக்கு சந்திரவதனம் என்று கமல்ஹாசன் பெயர் சூட்டினார். மேலும் மக்கள் நீதி மய்யத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டமன்ற தேர்தலில் நிற்க தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்த கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவிக்க விரும்பிய மாற்றுத்திறனாளிகளை அவர் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் தெற்கு மாவட்ட செயலாளர் கவிஞர் வரதன் நினைவு பரிசு வழங்கினார்.

இந்த விழாவில் இளைஞரணி மாவட்ட செயலாளர் ்அபிஷேக், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுரேந்திரகுமார், நகர் செயலாளர் சரவணன், இளைஞரணி நிர்வாகி பிரேம்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் கவிஞர் வரதன் நன்றி கூறினார்.


Next Story