சிவகங்கையில், தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம் - டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்பு


சிவகங்கையில், தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம் - டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்பு
x
தினத்தந்தி 31 Dec 2020 11:17 PM IST (Updated: 31 Dec 2020 11:17 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம் நடந்தது. இதில் டி.ஆர்.பாலு எம்.பி. கலந்து கொண்டார்.

சிவகங்கை,

தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம் சிவகங்கை கலைஞர் மாளிகையில் மாவட்ட செயலாளரும், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பெரியகருப்பன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தேர்தல் அறிக்கை குழுத் தலைவரும், தி.மு.க. மாநில பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்.பி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கொண்ட குழு ஆலோசனை நடத்தினார்கள்.

மாவட்ட துணை செயலாளர்கள் மணிமுத்து, சேங்கைமாறன், ஜோன்ஸ் ரூசோ, சிவகங்கை நகர் செயலாளர் துரை ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், முத்துராமலிங்கம், மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி மற்றும் கட்சியினர் தேர்தல் அறிக்கை குழுவிடம் மக்கள் பிரச்சினைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர்.

பின்னர் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:- ரஜினி எடுத்த முடிவு அவருடைய சொந்த முடிவாகும். வாரிசு அரசியல் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது ஓ.பி.எஸ்.சின் வாரிசு அரசியலை சொல்லியிருக்கிறார் என்றார்.

தொடர்ந்து மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டம் முழுவதும் கிராம மக்கள் சபை கூட்டம் 445 ஊராட்சிகளில் நடக்க இருக்கிறது. 400 மையங்களில் கிராம மக்கள் சபை கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்தில் மக்கள் எழுச்சியோடு பங்கேற்றுள்ளனர். மக்கள் கூறிய குறைகள், கோரிக்கைகளுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமையும் ஆட்சியில் தீர்வு காணப்படும்.

மக்கள் அ.தி.மு.க. ஆட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதியில் 39 தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

இதன் காரணமாக வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு அளிக்க இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது மக்கள் பிரச்சினைகளுக்்கு தீர்வு காணப்படும். மக்கள் மவுன புரட்சி செய்வார்கள். உரிய நேரத்தில் தங்கள் வெறுப்பை ஆட்சிக்கு எதிராக உணர்த்துவார்கள். 2021-ல் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்்.

Next Story