டீக்கடையில் நடந்த அரசியல் விவாதம் மோதல் ஆனது விவசாயியை குத்திக்கொல்ல முயற்சி தொழிலாளிக்கு வலைவீச்சு


டீக்கடையில் நடந்த அரசியல் விவாதம் மோதல் ஆனது விவசாயியை குத்திக்கொல்ல முயற்சி தொழிலாளிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Jan 2021 6:16 AM IST (Updated: 1 Jan 2021 6:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாயியை தொழிலாளி கத்தியால் குத்திக்கொல்ல முயன்ற பயங்கரம் நடந்துள்ளது.

கலபுரகி, 

சேடம் அருகே டீக்கடையில் நடந்த அரசியல் விவாதம் மோதலானது. இதனால் விவசாயியை தொழிலாளி கத்தியால் குத்திக்கொல்ல முயன்ற பயங்கரம் நடந்துள்ளது. இதில் தலைமறைவான தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-

கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகா கோட்லா கிராமத்தை சேர்ந்தவர் குருலிங்கப்பா (வயது 40). விவசாயி. அதே கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடரெட்டி (46). தொழிலாளி. இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று முன்தினம் கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் வெளியாகின.

அந்த சமயத்தில் குருலிங்கப்பா அந்தப் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். அதே டீக்கடைக்கு வெங்கடரெட்டியும் வந்துள்ளார். அங்கு வைத்து இருவரும் அரசியல் பற்றி பேசியுள்ளனர். இது பெரிய விவாதமாக மாறி வார்த்தை மோதல் ஏற்பட்டது. பின்னர் இது கைலகலப்பாக மாறியது. அதையடுத்து இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

அந்த சந்தர்ப்பத்தில் வெங்கடரெட்டி கத்தியால் குருலிங்கப்பாவின் கழுத்தில் குத்தினார்.

பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த குருலிங்கப்பா சேடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சேடம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அரசியல் விவாதம் முற்றியதால் வெங்கடரெட்டி, குருலிங்கப்பாவை குத்திக் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக சேடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வெங்கடரெட்டியை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story