144 தடை உத்தரவு, கடும் கட்டுப்பாடுகள் எதிரொலி: பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்தது


144 தடை உத்தரவு, கடும் கட்டுப்பாடுகள் எதிரொலி: பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்தது
x
தினத்தந்தி 1 Jan 2021 6:32 AM IST (Updated: 1 Jan 2021 6:32 AM IST)
t-max-icont-min-icon

144 தடை உத்தரவு, கடும் கட்டுப்பாடுகள் காரணமாக பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்தது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடக்கும். பெங்களூரு எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச் தெருவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும். வாலிபர்கள், இளம்பெண்கள் உற்சாகமாக புததாண்டை வரவேற்பது வழக்கம். ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந் தேதி இரவு எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச் தெருவில் உள்ள பார், ரெஸ்டாரண்ட், பப்புகளில் கூட்டம் நிரம்பி வழியும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாடத்திற்கு தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. மேலும் பெங்களூரு நகரில் 31-ந் தேதி (நேற்று) இரவு 10 மணி முதல் 1-ந் தேதி (இன்று) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மேலும் எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச் தெருவில் பொது இடங்களில் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மதுபான விடுதிகள், பப்புகள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் புத்தாண்டை கொண்டாட அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் கமிஷனர் கமல்பந்த் திடீரென ஒரு உத்தரவை பிறப்பித்தார்.

அதில் இன்று (நேற்று) மதியம் 12 மணி முதல் பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கூறி இருந்தார். ஆனாலும் பெங்களூரு நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் ஓடின.

இந்த நிலையில் நேற்று மதியம் முதல் பெங்களூரு நகரில் சாலையில் ஓடும் வாகனங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. குறிப்பாக எம்.ஜி.ரோட்டில் வாகனங்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே ஓடின. சர்ச் தெரு, பிரிகேட் ரோட்டிலும் பொது இடங்களில் மக்கள் கூடவில்லை. ஆனால் மதுபானவிடுதிகள், பப்புகள், ரெஸ்டாரண்டுகளில் மக்கள் கூடினார்கள். மக்கள் தாங்கள் வந்த வாகனங்களை சாலையில் ஆங்காங்கே விட்டு சென்று இருந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. சர்ச் தெரு, பிரிகேட் ரோட்டில் பொது வெளியில் மக்கள் கூடாததால் அந்த சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் சர்ச் தெரு, பிரிகேட் ரோடு, எம்.ஜி.ரோட்டிற்கு வரும் மக்கள் கூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்தது. அவர்கள் பொது இடத்தில் ஒன்றாக கூடி இருந்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொது இடங்களில் ஒன்று கூட கூடாது என்று கூறி மக்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அத்துடன் சர்ச் தெருவை இரும்பு தடுப்பு கம்பிகளை வைத்தும் போலீசார் அடைத்து இருந்தனர். மேலும் வாகனங்களில் சர்ச் தெரு, பிரிகேட் ரோடு வழியாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள்.

மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது போல பெங்களூரு நகரில் உள்ள முக்கியமான 44 மேம்பாலங்களும் மூடப்பட்டு இருந்தன. அந்த வழியாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுததி திருப்பி அனுப்பி வைத்தனர். நேற்று மதியம் முதலே திடீரென 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் பெங்களூரு நகரில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச் தெருவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதன் காட்சிகளை கண்காணிப்பு அறையில் இருந்தபடியே போலீசார் கண்காணித்தும் வந்தனர்.

இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து இருப்பது பற்றி சர்ச் தெருவுக்கு வந்த சில வாலிபர்கள் கூறுகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்து உள்ளது. இதனால் எங்களால் புத்தாண்டை கொண்டாட முடியாமல் போய் விட்டது. இருப்பினும் நண்பர்கள், தோழிகளுடன் ரெஸ்டாராண்டிற்கு சென்று உணவு சாப்பிட்டு வந்து உள்ளோம். புத்தாண்டை கொண்டாட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. அடுத்த ஆண்டு உற்சாகமாக புத்தாண்டை கொண்டுவோம் என்றனர்.

எப்போதும் கோலாகலமாக பெங்களூருவில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று களையிழந்து காணப்பட்டது.


Next Story