அவுரங்காபாத்துக்கு மாற்றுபெயர் அறிவிக்கப்பட்டால் வலுவாக எதிர்ப்போம் மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் பேட்டி


அவுரங்காபாத்துக்கு மாற்றுபெயர் அறிவிக்கப்பட்டால் வலுவாக எதிர்ப்போம் மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் பேட்டி
x
தினத்தந்தி 1 Jan 2021 6:55 AM IST (Updated: 1 Jan 2021 6:55 AM IST)
t-max-icont-min-icon

அவுரங்காபத்திற்கு மாற்று பெயர் அறிவிக்கப்பட்டால் கூட்டணி ஆட்சி என்று கூட பார்க்காமல் வலுவாக எதிர்ப்போம் என மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் கூறியுள்ளார்.

அவுரங்காபாத், 

அவுரங்காபாத் மாவட்டத்திற்கு சம்பாஜிநகர் என பெயர் மாற்ற வேண்டும் என்று சிவசேனா கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறது.

மேலும் 1995-ம் அண்டு அவுரங்காபாத் மாநகராட்சியில் இது தொடர்பாக ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரித்து காங்கிரஸ் கட்சி கோர்ட்டை நாடியது. இதனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.

ஆனால் தற்போது கொள்கை முரண்பாடு கொண்ட இரு கட்சிகள் கூட்டணியாக மராட்டியத்தில் ஆட்சி புரிந்து வருகின்றன.

இந்தநிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் பாலசாகேப் தோரட்டிடம் நிருபர்கள் அவுரங்காபாத் பெயர் மாற்ற விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், “அவுரங்காபாத்திற்கு சாம்பாஜி என்று பெயர் மாற்றுவது குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி அதனை வலுவாக எதிர்க்கும். சாமானிய மக்கள் வளர்ச்சிக்கு வழிவகை செய்யாமல் பெயர்களை மாற்றி விளையாடுவதில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.

நாங்கள் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்தாலும், இதுபோன்ற திட்டங்களை நிச்சயமாக எதிர்ப்போம். மேலும் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்திலும் இதுகுறித்து குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் அவுரங்காபாத்தின் பெயர் மாற்றப்படுவது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் எனது காதுக்கு எட்டவில்லை” என்றார்.

மேலும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியது பற்றி அவர் கூறியதாவது:-

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே போலவே மகாவிகாஸ் அரசு உருவாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முக்கிய பங்கு வகித்தார்.

எனவே சரத்பவாரை போல அரசை வழிநடத்தும் அதிகாரம் சோனியா காந்திக்கும் உள்ளது.

காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளதாக சாம்னாவில் எழுதுவது என்பது பத்திரிகையின் உரிமை, ஆனால் அதே வார்த்தையை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினால் அது வேறு விதமாக பார்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story