களக்காடு அருகே புதுமாப்பிள்ளையிடம் நகை பறித்த 5 பேர் ைகது
களக்காடு அருகே புதுமாப்பிள்ளையை கடத்தி நகை பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுமாப்பிள்ளை
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள காடன்குளம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் சிவராமன் (வயது 29). இவர் சென்னையில் உள்ள டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் சிவராமன் மேலசெவலில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் ஊருக்கு செல்வதற்காக மேலசெவல் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்களில் மேலசடையமான்குளத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் வந்தார். அவர் தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வருமாறும் பொன்னாக்குடியில் இறங்கி விடுகிறேன் என்றும் அழைத்தார். கண்ணனை ஏற்கனவே திருமண நிகழ்ச்சியில் பார்த்திருந்ததால் சிவராமனும் அவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார். சிறிது தூரம் சென்றதும், அவர்களது மோட்டார் சைக்கிளில் மேலசடையமான்குளத்தை சேர்ந்த அருண் என்பவரும் ஏறிக் கொண்டார்.
6 பவுன் நகை பறிப்பு
சிங்கிகுளம்-வடூவூர்பட்டி சாலையில் சென்ற போது திடீரென கண்ணன் அங்குள்ள காட்டுப்பாதையில் உள்ள ஒரு அறை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அங்கு கண்ணன் கூட்டாளிகளான மேலசடையமான்குளத்தை சேர்ந்த முருகன், கொம்பையா, முன்னீர்பள்ளத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் அரிவாளை காட்டி மிரட்டி சிவராமன் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகள், செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
5 பேர் கைது
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு லிசா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் சிவராமனிடம் தங்கநகைகளை பறித்தது தொடர்பாக கண்ணன், அருண், முருகன் உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story