ஒற்றுமையே உயர்வுக்கு ஒரேவழி அமைச்சர்கள், தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து


ஒற்றுமையே உயர்வுக்கு ஒரேவழி அமைச்சர்கள், தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து
x
தினத்தந்தி 1 Jan 2021 7:35 AM IST (Updated: 1 Jan 2021 7:35 AM IST)
t-max-icont-min-icon

ஒற்றுமையே உயர்வுக்கு ஒரே வழி என்று அமைச்சர்களும், தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி, 

அமைச்சர் நமச்சிவாயம் விடுத்துள்ள புத்தாண்டு செய்தியில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு கொரோனா எனும் நோயினால் வார்த்தைகளிலே விவரிக்க முடியாத துன்பத்தில் ஆட்கொண்டு மக்கள் அவதிப்பட்டார்கள். ஆனாலும் மனம் தளராமல் கடினமாக உழைத்து பொருளாதாரத்தை வளர்ச்சிபெற செய்தனர். அந்த தியாக உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இந்த புத்தாண்டில் நாம் இலக்கோடு பயணித்து தடைகளை தகர்த்தெறிந்து வளமான வாழ்க்கைக்கு அடித்தளமிடுவோம். ஆன்மிக பூமியாம் புதுச்சேரியில் வாழும் மக்கள் தன்னம்பிக்கையுடன் சாதனைகள் பல படைப்பார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்துவோம். நாம் அனைவரும் ஓரணியில் நின்று அனைவரது வாழ்க்கையையும் மறுமலர்ச்சி அடைய செய்வோம். ஒற்றுமை ஒன்றுதான் நம் உயர்வுக்கு ஒரே வழி என்பதை வரும் காலத்தில் நிரூபிப்போம். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கந்தசாமி

அமைச்சர் கந்தசாமி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

2020-ம் ஆண்டில் மக்கள் சந்தித்த அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் படிப்படியாக மீண்டுவரும் வேளையில் பிறக்கும் 2021-ம் ஆண்டு எல்லோருக்கும் நலம் தரும் ஆண்டாக அமையும். நமது முயற்சிகளில் ஆங்காங்கே தடைகற்களாக எதிர்படும் பிரச்சினைகளை சமாளித்து வளர்ச்சிப்பாதையை நோக்கி தன்னம்பிக்கையுடன் மன உறுதியுடன் உழைத்து வருகிறோம். எதிர்காலத்தை வளமையாக்க அரசுடன் நல் ஒத்துழைப்பை நல்கி வரும் மாநில மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் கொண்டாடி மகிழ எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஷாஜகான்

அமைச்சர் ‌ஷாஜகான் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

சோதனைகளை மறந்து சாதனைகளை படைக்கும் மகத்தான ஆண்டாக இந்த ஆங்கில புத்தாண்டு விளங்கவேண்டும். ஏழைகளின் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகி, மனிதநேயம் தழைத்து அன்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், மதச்சார்பற்ற தன்மை போன்ற நற்பண்புகளை கடைபிடித்து நாட்டின் இறையாண்மையை காப்போம்.

மக்களின் வாழ்வில் அன்பையும், மகிழ்ச்சியையும், நோயற்ற வாழ்க்கையையும், குறைவற்ற செல்வத்தையும் கொடுக்கும் ஆண்டாக இந்த ஆங்கில புத்தாண்டு அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

எம்.எல்.ஏ.க்கள்

சிவா எம்.எல்.ஏ. (தி.மு.க.):- புதுச்சேரி மக்கள் அனைவரும் புத்தாண்டில் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிகள் அனைத்தையும் பின்பற்ற உறுதியாய் இருக்கும்படி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்

அன்பழகன் எம்.எல்.ஏ. (அ.தி.மு.க.):-

இந்த புத்தாண்டில் கொரோனா உயிர்க்கொல்லி நோய் தாக்கம் முழுமையாக ஒழிய வேண்டும். போதை பொருட்களை தவிர்க்க இந்த ஆண்டில் தனி மனித உறுதிமொழி ஏற்பது நல்லது. மனித குலத்திற்கு தொற்று நோய் பாதிப்பு இல்லாத ஆரோக்கிய ஆண்டாக மலர வேண்டும்.

அ.தி.மு.க. மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர்:-

சமூக இடைவெளியில் தடுமாறிய உறவுகள் 2021-ல் புதுமை பூத்து தழைக்கட்டும். மக்களின் வளர்ச்சி பொலிவாகட்டும். மக்கள் நோய் அச்சம் நீங்கி மனம் மகிழட்டும். இனி வரும் காலங்களில் எல்லா நலங்களும், வளங்களும் அமைய இனிய வாழ்வு அமைய புத்தாண்டு வாழ்த்துகள்.

வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. (அ.தி.மு.க.):-

புதுச்சேரி மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நம்மை பிடித்த பிணிகள் அனைத்தும் நீங்கி வாழ்வு செழித்து வளம் கொழிக்கும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்.

அ.ம.மு.க. மாநில செயலாளர் வேல்முருகன்:-

புது ஆண்டில் சகோதரத்துவம், சமத்துவம், அன்பு, கல்வி என அனைத்து செல்வங்களும் பெற்று இன்புற்று வாழ புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் குறைகள், கஷ்டங்கள் நீங்கி முழு ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று சாதி, மத, இன, சமய வேறுபாடின்றி எதிர்மறை எண்ணங்களை நீக்கி இன்புற்று வாழவும், கொரோனா நோயில் இருந்து நம்மை பாதுகாத்து புத்தாண்டை வரவேற்போம்.

தே.மு.தி.க. செயலாளர் வி.பி.பி.வேலு:-

கொரோனாவால் துயராக கழிந்த ஆண்டு மறைந்து பிறக்கும் புத்தாண்டு மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் கொண்டு வரட்டும். எல்லோரும் எல்லா நலமும் பெற வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையில் மனிதநேயம் வளர்ப்போம். வாழ்த்துக்கள்.

கோகுலகிருஷ்ணன் எம்.பி., முன்னாள் எம்.பி. ராதா கிருஷ்ணன் ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story