நாகையில் பலத்த காற்றுடன் கனமழை அறுவடைக்கு தயாரான 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன


நாகையில் பலத்த காற்றுடன் கனமழை அறுவடைக்கு தயாரான 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 1 Jan 2021 10:02 AM IST (Updated: 1 Jan 2021 10:02 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் அறுவடைக்கு தயாரான 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

நாகப்பட்டினம்,


நாகை மாவட்டத்தில் நிவர், புரெவி என தொடர் புயல்கள் காரணமாக 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் நாகை மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இந்த தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக நாகையில் வெயில் அடித்தது. பின்னர் கடந்த 15-ந் தேதி முதல் 3 நாட்கள் மீண்டும் மழை பெய்தது. பின்னர் வெயிலும், கடும் பனிப்பொழிவும் நிலவி வந்தது. இந்த நிலையில் நாகையில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் நாகை, செல்லூர், பாலையூர், ஐவநல்லூர், திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன. அறுவடைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

25 ஆயிரம் நெற்பயிர்கள் சாய்ந்தன

இதுகுறித்து கடைமடை விவசாய சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், தொடர் புயல்கள் காரணமாக நாகை மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சேதமடைந்தன. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரமுடியாத நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் நாகை, செல்லூர், பாலையூர், ஐவநல்லூர், கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்து உள்ளது.

பருவம் தவறி டெல்டா மாவட்டங்களில் அடுத்தடுத்து பெய்துவரும் தொடர் மழையால், பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கதிர்கள் சாய்ந்து, நெல்மணிகள் பதர் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது வைக்கோலுக்கு கூட பயன்படுத்த முடியுமா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கும் மேல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளோம் என்றார்.

இழப்பீடு வழங்க வேண்டும்

செல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி ராயப்பன்:- நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். புயலால் அழிந்த பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தது விவசாயிகளுக்கு முழு திருப்தி அளிக்கவில்லை. அவர்கள் பாதிப்புகளை முறையாக கணக்கெடுக்கவில்லை. தை பொங்கல் அன்று புத்தரசியில் பொங்கலிட்டு, கொண்டாடலாம் என்று எண்ணியிருந்த விவசாயிகளுக்கு நெற்பயிர்கள் சாய்ந்தது பெரும் ஏமாற்றத்தையும், இழப்பையும், ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

Next Story