தொப்பூரில் லாரிகள் மோதல்; 14 எருமைமாடுகள் சாவு - 11 பேர் காயம்


தொப்பூரில் லாரிகள் மோதல்; 14 எருமைமாடுகள் சாவு - 11 பேர் காயம்
x
தினத்தந்தி 1 Jan 2021 1:00 PM GMT (Updated: 1 Jan 2021 1:00 PM GMT)

தொப்பூரில் லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 எருமைமாடுகள் செத்தன. 11 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

நல்லம்பள்ளி,

பெங்களூருவில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு பெயிண்டு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. லாரியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வசந்தகுமார் (வயது 42) என்பவர் ஓட்டினார்.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் புதூர் என்ற பகுதியில் வந்தபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது எருமை மாடுகள் ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற லாரியின் மீது பெயிண்டு பார லாரி மோதியது. பின்னர் எருமை பார லாரி அந்த பகுதியில் சாலையோரம் கடையுடன் உள்ள வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த 33 எருமைகளில், 14 எருமைகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தன.

மேலும் பெயிண்டு பார லாரி டிரைவர் வசந்தகுமார், எருமை பார லாரியை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் (40), அதே லாரியில் வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அசோக்குமார் (49), ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாரூக் (28), முகமது பாஷா (27), நூர்முகமது (30) ஆகியோர் காயம் அடைந்தனர்.

எருமை பார லாரி வீட்டின் மீது மோதியதில் வீட்டு் மேற்கூரையின் சிமெண்டு அட்டைகள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்ததில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணேசன் (30), அவரது மனைவி தீபா (26), மகள்கள் வைஷ்ணவி (5), தனுஸ்ரீ (3), ராதிகா (4) ஆகியோர் காயமடைந்து தவித்து கொண்டிருந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து பணியாளர்கள் ஒன்றிணைந்து, விபத்தில் சிக்கி தவித்த 11 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு 33 எருமை மாடுகளை ஏற்றிச் சென்றது தெரிய வந்ததுள்ளது.

Next Story