காரிமங்கலம் அருகே, கோவில் உண்டியல் திருட்டு
காரிமங்கலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம், நகை மற்றும் பொருட்களை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் கோவிலூர் ஊராட்சி சென்றாயனஅள்ளி கிராமத்தில் ஓம்சக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். நேற்று காலை பூசாரி சந்திரன் பூஜை செய்வதற்காக கோவில் நுழைவுவாயில் கதவை திறக்க வந்தார்.
அப்போது கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் பார்த்தபோது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் நேற்று முன்தினம் இரவு திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து ஊர் பொதுமக்கள் சார்பில் காரிமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரில் ஓம் சக்தி கோவிலில் வைத்திருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் ரூ. 20 ஆயிரம், காணிக்கை மற்றும் 1 பவுன் தாலி, காசு, பூஜை சாமான்கள், ஒலிபெருக்கிகள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது என்றும், இந்த திருட்டு குறித்து விசாரணை நடத்தி பொருட்களை மீட்டுத்தருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துணிகர சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story