புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை: ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களை மூட உத்தரவு -மேட்டூர் அணை பூங்காவும் மூடப்பட்டது
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களை மூட உத்தரவிடப்பட்டது. மேலும் மேட்டூர் அணை பூங்காவும் மூடப்பட்டது.
கன்னங்குறிச்சி,
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தற்போது குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவுவதால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. இது குறித்து மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெனார்த்தனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களான அண்ணா பூங்கா, படகு இல்லம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுகிறது. அதாவது நேற்று மாலை முதல் நாளை (சனிக்கிழமை) மாலை வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் யாரும் செல்லவேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் முதல் ஏற்காடு செல்லும் வாகனங்கள் அனைத்தும் அடிவாரத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. அதாவது தங்கும் விடுதிகளின் பதிவு செய்த வாகனங்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டது. மற்றபடி சுற்றிப்பார்க்க சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் சோதனைச்சாவடி அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே போல மேட்டூர் அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று காலை முதல் நாளை மாலை வரை மேட்டூர் அணை பூங்கா மூடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சேலத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஈரடுக்கு மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதற்காக பாலத்தின் தொடக்கத்தில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story