தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தால் கடும் நடவடிக்கை
அரசால் தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரித்துள்ளார்.
ராமநாதபுரம்,
இந்திய அரசாங்கத்தால் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அங்கீகரிக்கப்படாத ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை உற்பத்தி மற்றும் வளர்க்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் தடை விதிக்கப்பட்டுஉள்ளது.
காற்றுசுவாச மீன்களான இவை மற்ற மீன்களை வேட்டையாடி திண்பவை. குறைந்தது 8 ஆண்டுகள் வளரும் தன்மை கொண்ட இந்த மீன்கள் நீர்நிலைகளுக்குள் வந்துவிட்டால் அதனை அழிப்பது சாதாரண காரியமல்ல. குறைந்த அளவு தண்ணீரிலும் அதிகளவில் இனப்பெருக்கம் செய்யும் திறன்கொண்ட இந்த மீன்கள் நமது பாரம்பரிய நன்னீர் மீன் இனங்களையும் அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால் நமது பரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாய நிலை உருவாகும்.
இந்த மீன்களை பண்ணை குட்டைகளிலோ அல்லது மீன்வளர்ப்பு குளங்களிலோ வளர்த்தால் பெருமழை வெள்ளபெருக்கு சமயங்களில் வெளியில் சென்று ஏரி மற்றும் ஆறுகளில் கலந்து மீன்இனங்களை அழித்து ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர வேறு எந்த மீன்களும் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் விவசாயிகள் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை இருப்பு செய்து வளர்க்க வேண்டாம்.
ஏற்கனவே மீன் பண்ணைகளில் இந்த வகை மீன்களை வளர்த்துவரும் மீன்வளர்ப்போர் உடனடியாக அந்த மீன்களை அழிக்க வேண்டும். ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை உற்பத்தி, வளர்ப்பு, மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக புகார்கள் இது குறித்து பொது மக்கள் 04567-230355 எனற தொலை பேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் எச்சரித்துள்ளார்.
Related Tags :
Next Story