வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கண்காணிப்பு அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் - சிறப்பு பார்வையாளர் அறிவுறுத்தல்
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கண்காணிப்பு அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று சிறப்பு பார்வையாளர் கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கான சிறப்பு பார்வையாளர் மற்றும் சமூகநலத்துறை ஆணையர் ஆபிரகாம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர் பேசியதாவது:- தலைமை ேதர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, புதிய வாக்காளர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் குறித்து மனுக்கள் பெறப்பட்டு தற்போது மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணியினை செய்வதில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் தங்கள் பகுதியில் பெறப்பட்ட விண்ணப்பங்களை தகுதிவாரியாக பிரித்து, உடனுக்குடன் களப்பணி மேற்கொண்டு புதிய வாக்காளர்கள் குறித்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து உறுதிசெய்ய வேண்டும்.
அதேபோல் முகவரி மாற்றம், திருத்தம் குறித்து விண்ணப்பதாரரிடம் மனுக்களை பெறும் போதே உறுதிசெய்ய வேண்டும். இறந்தவர் நீக்கம் குறித்து உரிய ஆவணங்களை வைத்து விசாரணை செய்து விண்ணப்பத்தை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் பணிகளை கண்காணிப்பு அலுவலர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறுஅவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளார் (பொது) சிந்து, வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன் (சிவகங்கை), சுரேந்திரன் (தேவகோட்டை) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, திருப்பத்தூர் வட்டம், ஆ.தெக்கூர், திருக்களாப்பட்டி, காவனூர், வஞ்சினிப்பட்டி ஆகிய பகுதிகளில் நேரில் சென்று தேர்தல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு நடத்தினார்.
Related Tags :
Next Story