ஊத்துக்குளி அருகே, கணவரால் உயிரோடு தீவைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை


ஊத்துக்குளி அருகே, கணவரால் உயிரோடு தீவைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 Jan 2021 11:04 PM IST (Updated: 1 Jan 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்குளி அருகே குடும்ப தகராறு காரணமாக கணவரால் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைடுத்து கொலை வழக்காக போலீசார் மாற்றி விசாரித்து வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஊத்துக்குளி,

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள ஆர்.எஸ்.புதூர் பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் வீரக்குமார் (வயது 27). இவர் சென்ட்ரிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி (24). இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு தட்சணா ஸ்ரீ, சஞ்சனா ஸ்ரீ, வினன்யா ஸ்ரீ ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த மகேஸ்வரி வீட்டுக்குள் சென்று மண்எண்ணெய் கேனை எடுத்து வந்து அதில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்வேன் என்று தனது கணவனை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த வீரக்குமார் நானே உன் மீது தீயை வைக்கிறேன் என்று கூறி தீக்குச்சியை உரசி தீ பற்ற வைத்து மகேஸ்வரி மீது போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மகேஸ்வரியின்உடலில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் மகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு, உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மகேஸ்வரி மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மகேஸ்வரி போலீசாரிடம் வாக்கு மூலம் அளிக்கையில் தனது கணவர் தன் மீது தீ பற்ற வைத்ததாக கூறினார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். லேசான தீக்காயங்களுடன் தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் வீரக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story