புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சினிமா உதவி இயக்குனர் குத்திக்கொலை; சக கலைஞர் கைது
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சினிமா உதவி இயக்குனர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சக கலைஞரான மற்றொரு உதவி இயக்குனர் கைதானார்.
புத்தாண்டு கொண்டாட்டம்
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ருத்ரன் (வயது 25). இவர், சென்னை வளசரவாக்கத்தில் தங்கி, சினிமா துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் புத்தாண்டு தினத்தை தனது நண்பர்களுடன் வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் கொண்டாட முடிவு செய்தார். ஆனால் அங்கு போதிய இடவசதி இல்லாததால் போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில் உள்ள மற்றொரு உதவி இயக்குனர் மணிகண்டன் வீட்டுக்கு சென்றார்.
அங்கு தனது நண்பர்கள் குருசஞ்சய், ராம்குமார் ஆகியோருடன் சேர்ந்து ஒன்றாக மது குடித்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார்.
குத்திக்கொலை
அப்போது மணிகண்டனுக்கும், ருத்ரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மணிகண்டன் ஆபாசமாக பேசியதால் ஆத்திரம் அடைந்த ருத்ரன், தான் அணிந்திருந்த மோதிரத்தால் முகத்தில் குத்தியதில் மணிகண்டனின் நெற்றியில் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் வீட்டின் முன் பகுதியில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டு சிகரெட் புகைத்து கொண்டிருந்தனர். அப்போது தன்னை தாக்கியதால் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன், வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து ருத்ரனின் வயிற்றில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ருத்ரனை அவரது நண்பர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ருத்ரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story