ஆங்கில புத்தாண்டையொட்டி திருத்தணி முருகன், வீரராகவ பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்


திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்ற போது
x
திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்ற போது
தினத்தந்தி 2 Jan 2021 5:39 AM IST (Updated: 2 Jan 2021 5:39 AM IST)
t-max-icont-min-icon

ஆங்கில புத்தாண்டையொட்டி திருத்தணி முருகன் மற்றும் வீரராகவ பெருமாள் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.

திருத்தணி முருகன் கோவில்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்தது. மேலும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் நள்ளிரவு பிரார்த்தனைக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் முருகனின் 5-ம் படைவீடாக கருதப்படும் திருத்தணி முருகன் கோவிலில் 2021-ம் ஆண்டின் முதல் நாளான நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் சுப்பிரமணிய சாமி, வள்ளி, தெய்வயானை அம்மையாருக்கும் சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன்பின்னர் மூலவருக்கு சந்தன காப்பு, தங்கவேல் அணிவிக்கப்பட்டது. அதேபோல் தேவர் மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வயானையுடன் மேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த நிலையில், ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள் என்பதால் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து ‘அரோகரா அரோகரா’ என கோஷமிட்டபடி சாமி தரிசனம் செய்ய வந்தனர். கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் திரண்டு வந்ததால், பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

வீரராகவ பெருமாள் கோவில்
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று திருவள்ளூரில் உள்ள பழமைவாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் 6 மணிக்கு சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில், மஹாவல்லப கணபதி கோவில், புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில், காக்களூர் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் ஈக்காடு, கடம்பத்தூர், பேரம்பாக்கம், நரசிங்கபுரம், கூவம், குமாரச்சேரி, பாகசாலை, திருவாலங்காடு, திருமழிசை, போன்ற பகுதிகளில் உள்ள கோவில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதனை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. முக கவசம் அணிந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, வெப்ப அளவு பரிசோதனை செய்யப்பட்டு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Next Story