பெங்களூருவில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களிடம் பண மோசடி மர்மநபரை போலீஸ் தேடுகிறது


பெங்களூருவில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களிடம் பண மோசடி மர்மநபரை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 2 Jan 2021 12:34 AM GMT (Updated: 2 Jan 2021 12:34 AM GMT)

பெங்களூருவில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களிடம் பண மோசடி செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு, 

உத்தரகன்னடா மாவட்டம் சிர்சியை சேர்ந்த 23 வயது இளம்பெண், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த இளம்பெண் வேலையை இழந்தார். பின்னர் அவர் பெங்களூருவில் இருந்து சிர்சிக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

இதற்கிடையில், இளம்பெண்ணின் தாயை, பிரமோத் ஹெக்டே என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உங்களது மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை இளம்பெண்ணின் தாயும் நம்பியுள்ளார். பின்னர் அந்த இளம்பெண் சிர்சியில் இருந்து பெங்களூருவுக்கு வந்துள்ளார். பெங்களூருவில் பிரமோத் ஹெக்டேவை இளம்பெண் சந்தித்து பேசியுள்ளார். அரசு வேலைக்கு விண்ணப்பிக்க ரூ.25 ஆயிரம் கொடுக்கும்படி பிரமோத் ஹெக்டே கூறியுள்ளார்.

அதன்படி, அவரும் ரூ.25 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பின்னர் தங்கும் விடுதியில் இளம்பெண்ணை விட்டுவிட்டு பிரமோத் ஹெக்டே சென்றிருந்தார். அதன்பிறகு, பிரமோத் ஹெக்டேவின் செல்போன் சுவிட்ச் செய்யப்பட்டதால், அவரை இளம்பெண்ணால் தொடர்பு கொள்ள முடியாமல் போய் விட்டது.

இந்த இளம்பெண் தவிர வேலைத்தேடி பெங்களூருவுக்கு வரும் இளம்பெண்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி, பிரமோத் ஹெக்டே பணம் வாங்கி மோசடி செய்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் வர்த்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரமோத் ஹெக்டேவை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story