திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடியில் அரசு பஸ்களுக்கு அனுமதி மறுப்பு; டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக செல்ல அரசு பஸ்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரச்சினைக்குரிய சுங்கச்சாவடி
திருமங்கலம் அருகே கப்பலூர் 4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. அரசு விதிமுறைகளை மீறி அமைந்துள்ள இந்த சுங்கச்சாவடியில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்பதால் வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருமங்கலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் மொத்தம் 102 பஸ்கள் உள்ளன. அதில் 92 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. மீதமுள்ள 10 பஸ்கள் தற்காலிக பஸ்களாக இயக்கப்படும்.
அரசு பஸ்கள் பாஸ்டேக் கவுண்ட்டர்கள் உள்பட எந்த கவுண்ட்டர்கள் வழியாகவும் சென்று வரலாம். இந்த பஸ்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் மாதம் ஒரு முறை காசோலையாக வழங்கப்படும். கடந்த மாதத்திற்கு சுங்கச்சாவடி கட்டணம் 48 பஸ்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அனுமதி மறுப்பு
இந்த நிலையில் சுங்கக் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி நேற்று திருமங்கலம் பணிமனைக்கு உட்பட்ட அரசு பஸ்கள் பாஸ்டேக் கவுண்ட்டர் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பாஸ்டேக் இல்லாமல் பணம் செலுத்தி செல்லும் கவுண்ட்டர்கள் வழியே செல்ல அனுமதிக்கப்பட்டது. சுங்கச்சாவடியில் பாஸ்டேக் இல்லாத கவுண்ட்டர்கள் 2 மட்டுமே உள்ளது. இந்த 2 கவுண்ட்டர்களில் அரசு பஸ்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
இதனால் நேரம் அதிகமாகிக் கொண்டே சென்றதால் பாஸ் டேக் வழியாக செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று சுங்கச்சாவடி ஊழியர்களிடம் பஸ் டிரைவர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் அனுமதிக்க முடியாது என்று சுங்கச்சாவடி ஊழியர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
இதனால் அரசு பஸ் ஊழியர்கள் பஸ்களை இயக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுங்கச்சாவடியில் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அனைத்து அரசு பஸ்களுக்கும் கட்டணம் செலுத்தி காசோலை எடுத்து கொடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் அரசு பஸ்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கட்டண விலக்கு வேண்டும்
பொதுவாக அரசு பஸ்களில் ஏழை மக்களே அதிகம் பயணிப்பார்கள். அவ்வாறு ஏழைகளுக்காக இயக்கப்படும் அரசு பஸ்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே மத்திய அரசு இது குறித்து பரிசீலனை செய்து சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு கட்டண விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும்.
மேலும் கப்பலூர் சுங்கச்சாவடி என்றாலே அடிக்கடி பிரச்சினை ஏற்படக்கூடிய இடம் என மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. எனவே சுங்கச்சாவடி இருக்கும் இடத்தை முறைப்படி மேலக்கோட்டை அருகே மாற்றி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story