கரூரில் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்-தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
ஆங்கில புத்தாண்டு
2020-ம் ஆண்டுக்கு விடைகொடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு 2021-ம் ஆண்டு புதிதாக பிறந்தது. இந்த ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள புனித தெரசம்மாள் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது வருகிற ஆண்டில் அனைத்து மக்களின் வாழ்விலும் துன்பம் என்னும் இருள் நீங்கி, புத்துணர்வு ஏற்பட வேண்டும் என்பதை சுட்டி காட்டும் விதமாக பங்கு மக்கள் ஏசுவை நினைத்து ஜெபம் செய்தனர். பின்னர் பங்கு தந்தை செபாஸ்டின் துரை தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது புத்தாண்டு வாழ்த்து கூறி நற்செய்தி வழங்கினார். அதனை தொடர்ந்து புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
இதேபோல், கரூர் சர்ச் கார்னரில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயம், புலியூர் குழந்தை ஏசு தேவாலயம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும் உள்ள தேவாலயங்களுக்கு கிறிஸ்தவர்கள் சென்று புத்தாண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் பல இடங்களில் வெடிக்கப்பட்டன. கரூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லாத காரணத்தால், பெரியஅளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. கரூர் நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோவில்களில் சிறப்பு வழிபாடு
புத்தாண்டு பிறப்பையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தாந்தோன்றிமலை வெங்கடரமணசாமி கோவில், வெண்ணைமலை முருகன் கோவில், கரூர் மாரியம்மன் கோவில், அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் புத்தாண்டினை வரவேற்கும் விதமாக பெரும்பாலானோர் நள்ளிரவில் தங்களது வீட்டு முன்பு கோலமிட்டனர். பின்னர் அக்கம், பக்கத்தினருக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டினை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கற்பக விநாயகர் கோவில்
கரூர் அண்ணாசாலையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் நேற்று புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கற்பக விநாயகருக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்று, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல இக்கோவிலில் உள்ள பாலமுருகன், துர்க்கை அம்மன், ஆஞ்சநேயர், அய்யப்பன், நவகிரகம் உள்ளிட்ட சாமிகளுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ேவலாயுதம்பாளையம்
ேவலாயுதம்பாளையம் ஹைஸ்கூல்மேடு பகுதியில் உள்ள பெந்தகோஸ் ஆலயத்தில் போதகர் டேவிட்ராஜன் தலைமையிலும், முல்லை நகரில் உள்ள இந்திய சுவிஷே திருச்சபையிலும், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள அந்தோணியர் ஆலயத்திலும், புகளூர் மெயின் ரோட்டிலும் உள்ள சி.எஸ். ஐ. கிறிஸ்துவநாதர் ஆலயத்திலும், தளவாப்பாளையம் பிலிப் நகரில் உள்ள சி.எஸ்.ஐ.ஆலயத்திலும், காகிதபுரம் குடியிருப்பில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். தொடர்ந்து புத்தாண்டு பிறந்ததையொட்டி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வேலாயுதம்பாளையம் அருகே நாணப்பரப்பு மாரியம்மன் கோவிலில் நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு நீல நிற பட்டாடை உடுத்தி, மலர் மாலைகளால் அலங்காராம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.
இதேபோல், புகழிமலை முருகன் கோவில், நன்செய்புகளூர் மேகபாலீஸ்வரர் கோவில், மலைவீதி மகா மாரியம்மன் கோவில், டி.என்.பி.எல். சாலை அய்யப்பன் கோவில், தளவாப்பாளையம் மாரியம்மன் கோவில், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில், சேங்கல் மலை வரதராஜ் பெருமாள் கோவில், மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதி்ல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குளித்தலை
குளித்தலையில் உள்ள பிரசித்தி பெற்ற கடம்பவனேசுவரர், நீலமேகப்பெருமாள், அய்யப்பன் கோவில், அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர், சிவாலயம் சிவபுரீஸ்வரர் உள்ளிட்ட குளித்தலை மற்றும் இதைச்சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பொதுமக்கள்தங்கள் ஊரில் உள்ள கோவில்களுக்கு சென்று சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும் சிலர் வாங்கிய புதிய வாகனங்களை கோவிலுக்கு கொண்டுவந்து பூஜை செய்து சாமியை வழிபட்டனர். இதேபோல், குளித்தலை பகுதியில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் விதமாக நேற்று முன்தினம் இரவு 12 மணிக்குமேலும், நேற்று காலையும் குளித்தலை பகுதியில் உள்ளபல்வேறு தெருக்களில் சாதி, மத வேறுபாடின்றி சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பட்டாசு வெடித்தும், கேக்குகள் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடி வரவேற்றனர்.
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம், செங்கல், கணியலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாயனூர் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலில் காலை முதல் மதியம் வரை கூட்டம் அதிகளவில் இருந்தது. இதேபோன்று திருக்கண் வாலீஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நொய்யல்
நொய்யல் கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில், அத்திப்பாளையம் பெரிய பொன்னாச்சி அம்மன், சின்ன பொன்னாச்சிஅம்மன் கோவில், சேமங்கி மாரியம்மன் கோவில், திருக்காடுதுறை மாரியம்மன் கோவில், மாதேஸ்வரன், மாதேஸ்வரி அம்மன் கோவில், பசுபதிபாளையம் மாரியம்மன் கோவில், புன்னம் பகுதியிலுள்ள புன்னைவனநாதர், புன்னைவன நாயகி கோவில், மாரியம்மன் கோவில், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், குந்தாணி பாளையம் நத்தமேடு பரமேஸ்வரி அம்மன் கோவில், ஈஸ்வரன் கோவில், நஞ்சை புகளூர் மேகபாலீஸ்வரர் கோவில், தவிட்டுப்பாளையம் மாரியம்மன் மற்றும் பகவதி அம்மன் கோவில், பாலமலை முருகன் கோவில்உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தோகைமலை
தோகைமலை வரதராஜ பெருமாள் கோவில், வெள்ளப்பட்டி மகா மாரியம்மன் கோவில், ஆர்டி மலை விராச்சிலை ஈஸ்வரர் கோவில், மேல வெளியூர் பட்டத்தரசி அம்மன் கோவில், சின்ன ரெட்டிபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர் கோவில், தோகைமலை மலை மீது அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
லாலாபேட்டை
லாலாபேட்டையில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பரிவார தெய்வங்களான விநாயகர், மாரியம்மன், மதுரைவீரன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இக்கோவிலில் நேற்று ஆங்கில வருடபிறப்பையொட்டி சுமங்கலி பூஜை மற்றும திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.
Related Tags :
Next Story