கூடலூர் அருகே ஊசிமலை காட்சிமுனையில் நுழைவு கட்டண வசூல் மையத்தை சூறையாடிய காட்டுயானை கூட்டம்
கூடலூர் அருகே ஊசிமலை காட்சிமுனையில் நுழைவு கட்டண வசூல் மையத்தை காட்டுயானை கூட்டம் சூறையாடியது.
கூடலூர்,
கூடலூர் அருகே ஊசிமலை காட்சிமுனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு காட்சிமுனைக்கு செல்லும் பாதையை வனத்துறையினர் மற்றும் சூழல் சுற்றுலா மேம்பாட்டு திட்ட பணியாளர்கள் மூடிவிட்டு சென்றனர். பின்னர் நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல காட்சிமுனை பாதையை திறக்க வந்தனர்.
அப்போது நள்ளிரவில் காட்டுயானை கூட்டம் புகுந்து, காட்சிமுனைக்கு செல்லும் பாதையில் உள்ள வரவேற்பு மற்றும் நுழைவு கட்டணம் வசூலிக்கும் மைய தகர அறைகளை உடைத்து சூறையாடி இருப்பது தெரியவந்தது. மேலும் சுற்றுலா பயணிகளுக்காக வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கழிப்பிடங்களும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த நடுவட்டம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது சுற்றுலா பயணிகள் காட்சிமுனையை காண வந்தனர். எனினும் பாதுகாப்பு கருதி ஊசிமலை காட்சிமுனைக்கு செல்ல தடை விதித்தனர். தொடர்ந்து காட்சிமுனையில் உள்ள வனப்பகுதிகளில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு காட்டுயானை கூட்டம் இல்லாதது உறுதியானது.
தொடர்ந்து வரவேற்பு மற்றும் நுழைவு கட்டண வசூல் மையத்தை வேறு இடத்துக்கு வனத்துறையினர் மாற்றினர். பின்னர் காலை 9 மணிக்கு பிறகு காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையில் ஊசிமலை காட்சிமுனை பகுதியில் இருந்து 7 காட்டு யானைகள் 27-வது மைல் வழியாக சில்வர் கிளவுட் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் சாலையில் இறங்கி காட்டுயானைகளை செல்போனில் படம் பிடித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டது.உடனே அங்கு வனத்துறையினர் வந்து காட்டு யானைகளை விரட்டியடித்தனர். மேலும் புகைப்படம் எடுத்தவர்களை எச்சரித்தனர்.
Related Tags :
Next Story