புத்தாண்டையொட்டி வேலூர் கோட்டையில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்


புத்தாண்டையொட்டி வேலூர் கோட்டையில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்
x
தினத்தந்தி 2 Jan 2021 5:45 PM IST (Updated: 2 Jan 2021 5:45 PM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டையொட்டி வேலூர் கோட்டையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

வேலூர்,

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் வேலூர் கோட்டை மூடப்பட்டது. பின்னர் ஊரடங்கு தளர்வின் காரணமாக கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் கோட்டை கொத்தளம், மதில்சுவர் நடைபாதையில் சென்று சுற்றி பார்க்கவும், நடைபயிற்சி செல்லவும் அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த மாதம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோட்டையில் நடைபயிற்சி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் புத்தாண்டையொட்டி வேலூர் கோட்டையில் சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகமாக இருந்தது. கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு வந்திருந்தனர். கோட்டை முழுவதும் மக்கள் நிறைந்து காணப்பட்டனர். ஆனால் மதில் சுவர் பகுதிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

மேலும் 9 மாதங்களுக்குப் பிறகு கோட்டையில் குதிரை சவாரி களைகட்டியது. சிறுவர், சிறுமிகள் குதிரைகளிலும், குதிரை பூட்டப்பட்ட வண்டியில் சென்று குதூகலித்தனர்.

கோட்டைக்கு வெளியே உள்ள பூங்காவிலும் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்திருந்து பொழுதை கழித்தனர். பூங்கா திறக்கப்படாததால் பொதுமக்கள் வேலியை தாண்டிச் சென்றனர். நுழைவு வாயில் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. கோவில் மற்றும் நுழைவு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story