புவனகிரியில், அழுகிய நிலையில் பெண் பிணம் - கற்பழித்து கொலையா? போலீசார் விசாரணை


புவனகிரியில், அழுகிய நிலையில் பெண் பிணம் - கற்பழித்து கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Jan 2021 7:32 PM IST (Updated: 2 Jan 2021 7:32 PM IST)
t-max-icont-min-icon

புவனகிரியில் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புவனகிரி,

சிதம்பரம் அடுத்த புவனகிரி கடைவீதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை திறப்பதற்காக நிறுவனத்தின் காவலாளி பெருமாத்தூரை சேர்ந்த செந்தில்குமார்(வயது 45) என்பவர் நேற்று காலை வந்தார். அப்போது நிறுவனத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்து இதுபற்றி நிதி நிறுவன அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டிச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிதி நிறுவனத்தை சோதனை செய்தனர். அப்போது நிதி நிறுவனத்தில் மாடிப்பகுதியில் நிர்வாணமாக அழுகிய நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து போலீசார், இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் புதுச்சேரி பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நிதி நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் அருகில் உள்ள தனியார் கணினி மையத்தில் கணக்காளராக வேலை பார்த்து வரும் ஆயிபுரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசன் மகன் முரசொலி மாறன் (29) என்பவர், கடந்த 29-ந்தேதி இரவு 7 மணியளவில் ஒரு பெண்ணுடன், நிதி நிறுவனத்தின் மாடிப்படிக்கு ஏறிச்செல்லும் காட்சியும், இரவு 10 மணியளவில் முரசொலி மாறன் மட்டும் தனியாக கீழே இறங்கி வந்த காட்சியும் பதிவாகி இருந்தது.

இதனால் முரசொலி மாறன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரிக்க சென்றபோது, அவர் ஏற்கனவே தலைமறைவாகி இருந்தார் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த பெண்ணை முரசொலி மாறன் கற்பழித்து கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தறைமறைவாக உள்ள கணினி மைய ஊழியர் முரசொலிமாறனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story