சம்பா பருவத்திற்காக கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் - விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்


சம்பா பருவத்திற்காக கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் - விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Jan 2021 2:15 PM GMT (Updated: 2 Jan 2021 2:15 PM GMT)

சம்பா பருவத்திற்காக கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலமாக விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மூலம் 945.51 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது.

இது இயல்பான மழையை காட்டிலும் 247.71 மி.மீ அதிகம் ஆகும். நிவர் மற்றும் புரெவி புயலினால் ஏற்பட்ட பயிர் சேதங்களை வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக் கலைத்துறை மூலம் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் கோரப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 801 விவசாயிகள், 1 லட்சத்து 85 ஆயிரத்து 506 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பா பருவத்திற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு, விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. குறுவை பருவத்திற்கு அமைக்கப்பட்டது போல், சம்பா பருவத்திற்கும் தேவையான அளவில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

கடந்த ஆண்டுகளில் கரும்பு சாகுபடி செய்த 12 ஆயிரத்து 478 விவசாயிகளுக்கு, கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகையாக ரூ.1, 595.59 லட்சம் கோரி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், வருகிற ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் பன்னீர் கரும்பு வழங்குவதற்காக நமது மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் பயன்படுத்தப்பட உள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகள், புயல் மற்றும் வெள்ளத்தினால் சாய்ந்து கிடக்கும் கரும்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) நடன சபாபதி மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் காணொலி காட்சி மூலம் விவசாயிகளிடமிருந்து குறைகளை கேட்டறிந்து, மனுக்கள் பெறப்பட்டது.

Next Story