நாமக்கல்லில் கடும் பனிமூட்டம் - பொதுமக்கள் அவதி


நாமக்கல்லில் கடும் பனிமூட்டம் - பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 2 Jan 2021 8:54 PM IST (Updated: 2 Jan 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் நகரில் நேற்று காலை 9 மணி வரை நீடித்த கடும் பனிமூட்டத்தால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் மாலை வரை பல்வேறு இடங்களில் மிதமானது முதல் சாரல்மழை பெய்தது. அதிகபட்சமாக கொல்லிமலை மற்றும் மங்களபுரம் பகுதியில் 36 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு :-

மங்களபுரம்-36, கொல்லிமலை-36, பரமத்திவேலூர்-28, சேந்தமங்கலம்-27, நாமக்கல்-25, எருமப்பட்டி-20, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-19, புதுச்சத்திரம்-19, ராசிபுரம்-18, திருச்செங்கோடு-17, மோகனூர்-15, குமாரபாளையம்-7.

இதுஒருபுறம் இருக்க நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. அருகே செல்பவர்கள் கூட தெரியாத அளவுக்கு புகை மண்டலமாக பனிமூட்டம் காணப்பட்டதால் புத்தாண்டை முன்னிட்டு காலையில் எழுந்து கோவிலுக்கு சென்ற பக்தர்கள், வேலைக்கு செல்லும் அலுவலர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்தனர்.

காலை 8.30 மணிக்கு கூட வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு மெதுவாக வாகனங்களை ஓட்டி செல்வதை பார்க்க முடிந்தது. பெரும்பாலான பொதுமக்கள் சுவெட்டர் மற்றும் குல்லா அணிந்து செல்வதையும் காண முடிந்தது. காலை 9 மணி அளவில் சூரியனின் கதிர்கள் பூமியில் விழ தொடங்கியதும் கொஞ்சம், கொஞ்சமாக பனிமூட்டம் விலகியது.

மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று புத்தாண்டு தினத்தன்று காலை 8 மணி வரை சாலைகளில் கடும் பனி இருந்ததால் பஸ், லாரி, கார், இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிர விட்டவாறு சென்றனர். வாகனங்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் மிக மெதுவாக சென்றன, இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானர்கள்.

Next Story