புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மீறி கடற்கரையில் குவிந்த மக்கள் - டேனிஷ் கோட்டையை பார்வையிட முடியாமல் ஏமாற்றம்
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மீறி தரங்கம்பாடி கடற்கரையில் மக்கள் குவிந்தனர். அப்போது அவர்கள் டேனிஷ் கோட்டையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பொறையாறு,
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்து உள்ளது. ஆனால் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் தடையை மீறி மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்தனர். வழக்கமாக டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ந் தேதிகளில் தரங்கம்பாடி கடற்கரையில் ஏராளமான மக்கள் கூடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் காரணமாக, வழக்கமாக புத்தாண்டு சமயத்தில் உற்சாகமாக காணப்படும் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்தினரோடு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரையோரம் வைக்கப்பட்டிருந்த சிறு கடைகளில் உணவு பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று தரங்கம்பாடி டேனிஷ்கோட்டைக்கு விடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கானோர் டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Related Tags :
Next Story