திருவோணம் அருகே, அனுமதியின்றி ஜல்லிக்கட்டு; காளை முட்டியதில் வாலிபர் கவலைக்கிடம் - 5 பேர் மீது வழக்கு


திருவோணம் அருகே, அனுமதியின்றி ஜல்லிக்கட்டு; காளை முட்டியதில் வாலிபர் கவலைக்கிடம் - 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Jan 2021 9:23 PM IST (Updated: 2 Jan 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

திருவோணம் அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் படுகாயமடைந்த வாலிபர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்த தளிகைவிடுதி கிராமத்தில் பிள்ளையார்கோவில் அருகே புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போலீசாரிடம் அனுமதி பெறாமல் சிலர் நேற்று காலை ஜல்லிக்கட்டு நடத்தினர்.

இதற்காக புதுக்கோட்டை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டு காளைகள் சரக்கு வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டை காண்பதற்காக அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

அப்போது தனது வீட்டின் எதிரே நின்று கொண்டிருந்த தளிகைவிடுதி வடக்கு தெருவை சேர்ந்த தனபால் மகன் பிரபாகரன்(வயது 26) என்பவர் மீது ஜல்லிக்கட்டு காளை ஒன்று முட்டியது.

இதில் முகம் மற்றும் மார்பில் படுகாயம் அடைந்த பிரபாகரனை அவரது உறவினர்கள் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பிறகு அவரை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவோணம் போலீசார், சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டிருந்த 6 காளைகள், தொடர்புடைய 3 டிரைவர்கள் உள்ளிட்ட 8 நபர்களையும் பிடித்து திருவோணம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து திருவோணம் போலீசார் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு நாளில் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளை முட்டி வாலிபர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பது திருவோணம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story