பொங்கல் பண்டிகை நெருங்குவதால் திண்டுக்கல்லில் விற்பனைக்கு குவிந்த கரும்பு
பொங்கல் பண்டிகை நெருங்குவதால் திண்டுக்கல்லில் விற்பனைக்கு கரும்புகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல்,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையில் பூஜைக்கு மட்டுமின்றி, மக்கள் விரும்பி தின்னும் பொருளாக கரும்பு உள்ளது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் சாணார்பட்டி, திண்டுக்கல், பழனி, ரெட்டியார்சத்திரம், நிலக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால், கரும்பு அறுவடை தொடங்கி விட்டது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் கரும்புகள் திண்டுக்கல் மட்டுமின்றி வெளிமாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் திண்டுக்கல்லை பொறுத்தவரை காந்தி மார்க்கெட் பகுதியில் கரும்புகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
ஒரு கரும்பு ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 10 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.300 முதல் ரூ.450 வரை விற்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட விலை உயர்வு என்றாலும், மக்கள் ஆர்வமுடன் கரும்புகளை வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரேஷன்கடைகளில் பொங்கல் பொருட்களுடன் முழுகரும்பு வழங்கப்பட உள்ளது. இதனால் கரும்பின் தேவை அதிகரித்துள்ளது.
அதேநேரம் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து விட்டது. இதனால் இந்த ஆண்டு கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இன்னும் ஒருசில நாட்களில் கரும்பு வரத்து அதிகரிக்கும். அப்போது கரும்பின் விலை சிறிது குறையும் என்று கூறினார்.
Related Tags :
Next Story