புத்தாண்டு கொண்டாட வந்த இடத்தில் சோகம்: கடலில் மூழ்கி மாணவர் உள்பட 2 பேர் பரிதாப சாவு - 3 நாட்களுக்கு பிறகு உடல்கள் மீட்பு
கருங்கல் அருகே கடலில் மூழ்கிய மாணவர் உள்பட 2 பேரின் உடல் 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட வந்த போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
கருங்கல்,
குமரி மாவட்டம் கருங்கல் அருகே கப்பியறை பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ஜிபின் (வயது 25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அவர் சொந்த ஊருக்கு நண்பர்களுடன் வந்தார்.
இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி அன்று குறும்பனை பாரியக்கல் கடற்கரைக்கு அவர்கள் சென்றனர். கடலின் அழகை ரசித்த அவர்கள் ஆர்வமிகுதியில் உள்ளே சென்று, அங்குள்ள பாறையில் நின்று செல்பி எடுத்தனர்.
அப்போது கடலில் இருந்து எழுந்த ராட்சத அலை ஒன்று அவர்கள் மீது மோதியது.
மோதிய வேகத்தில் ஜிபின் மற்றும் நண்பர்களான செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த மாணவர் பாலாஜி (19), சுரேஷ் (28) ஆகிய 3 பேரையும் ராட்சத அலை சுருட்டிக் கொண்டு உள்ளே இழுத்து சென்றது. இதில் சுரேஷ் மட்டும் கரை சேர்ந்தார். ஆனால் மற்ற 2 பேரையும் காணவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்த கடலோர போலீசார் மற்றும் மீனவர்கள் விரைந்து சென்று மாயமான 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் ஜிபின், பாலாஜியை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.
இந்த நிைலயில் நேற்று 3-வது நாளாக மீனவர்கள் கடலில் மாயமானவர்களை தேடினர். அப்போது ஜிபின் மற்றும் பாலாஜியின் உடல்கள் கடலில் மிதப்பதை கண்டனர். உடனே மீனவர்கள் இருவரின் உடலையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
கடலில் மூழ்கியவர்களின் உடல் பிணமாக மீட்கப்பட்ட தகவலை அறிந்த உறவினர்கள் அங்கு விரைந்து வந்து, உடல்களை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து 2 பேரின் உடல்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கடலில் மூழ்கிய மாணவர் உள்பட 2 பேர், 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story