24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த நிலையில் 54 வயது பாதிரியார், பலாத்கார வழக்கில் கைது
பல்லாரியில் 24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த நிலையில் மற்றொரு பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக 54 வயது பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
பல்லாரி டவுனில் லீவிங் வாட்டர் என்ற பெயரில் தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாதிரியாராக இருந்து வந்தவர் ரவிக்குமார் (வயது 54). இந்த நிலையில் தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்ய வந்த சுவேதா (24) என்ற இளம்பெண்ணுடன், பாதிரியார் ரவிக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டு இருந்தது.
பின்னர் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சுவேதா, பாதிரியார் ரவிக்குமாரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தங்களது மகளை பாதிரியார் ரவிக்குமார் கடத்தி சென்று விட்டதாக பல்லாரி டவுன் போலீசில் சுவேதாவின் பெற்றோர் புகார் அளித்து இருந்தனர்.
இந்த நிலையில் சுவேதா சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் என்னை பாதிரியார் ரவிக்குமார் கடத்தி செல்லவில்லை என்றும், நாங்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் மதத்தின் பெயரை பயன்படுத்தி தன்னிடம் பாதிரியார் ரவிக்குமார் ரூ.9 லட்சம் வரை வாங்கி மோசடி செய்து விட்டதாக ஒரு பெண்ணும், தன்னை பாதிரியார் ரவிக்குமார் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் கூறி மற்ெறாரு இளம்பெண்ணும் பல்லாரி டவுன் போலீசில் புகார் அளித்து இருந்தனர்.
அந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் ரவிக்குமாரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பாதிரியார் ரவிக்குமாரை நேற்று பல்லாரி டவுன் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பல்லாரி கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். வேறு ஏதாவது பெண்களிடம் ரவிக்குமார் பண மோசடி செய்தாரா? பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
24 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த பாதிரியார், பலாத்கார வழக்கில் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story