காங்கிரஸ் எதிர்ப்பு காரணமாக அவுரங்காபாத் பெயர் மாற்றும் திட்டம் கூட்டணி அரசை பாதிக்காது சிவசேனா நம்பிக்கை
காங்கிரஸ் எதிர்ப்பு காரணமாக அவுரங்காபாத் பெயர் மாற்றும் திட்டம் கூட்டணி அரசை பாதிக்காது என்று சிவசேனா நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
மும்பை,
அவுரங்காபாத் மாவட்டத்தை சம்பாஜிநகர் என பெயர் மாற்ற வேண்டும் என்று சிவசேனா கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறது.
மேலும் 1995-ம் அண்டு அவுரங்காபாத் மாநகராட்சியில் இது தொடர்பாக ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரித்து காங்கிரஸ் கட்சி கோர்ட்டை நாடியது. இதனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.
தற்போது கொள்கை முரண்பாடு கொண்ட இரு கட்சிகள் கூட்டணியாக மராட்டியத்தில் ஆட்சி புரிந்து வருகின்றன.
இந்தநிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் பாலசாகேப் தோரட், கூறுகையில், “அவுரங்காபாத்திற்கு சாம்பாஜி நகர் என்று பெயர் மாற்றுவது குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி அதனை வலுவாக எதிர்க்கும். சாமானிய மக்கள் வளர்ச்சிக்கு வழிவகை செய்யாமல் பெயர்களை மாற்றி விளையாடுவதில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.
நாங்கள் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்தாலும், இதுபோன்ற திட்டங்களை நிச்சயமாக எதிர்ப்போம். மேலும் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்திலும் இதுகுறித்து குறிப்பிடப்படவில்லை” என்றார்.
இதுகுறித்து நேற்று சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், "அவுரங்காபாத்திற்கு சம்பாஜி நகர் என பெயரிடுவதால் அது மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கத்தை பாதிக்காது. இந்த பிரச்சினையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் அமர்ந்து பேசி தீர்வு காணப்படும்" என்றார்.
மேலும் இதுபற்றி சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில், "அவுரங்காபாத் பெயர் அரசு ஆவணங்களில் மாற்றப்படவிட்டாலும், மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே, அதனை சம்பாஜிநகர் என்று அழைத்தார். அப்போது காங்கிரஸ் முதல்-மந்திரி தான் ஆட்சியில் இருந்தார். சம்பாஜி நகர் பெயரை மக்களும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் சிலர் இந்த பிரச்சினை கூட்டணி அரசில் பிளவை ஏற்படுத்தும் என்று கருதுகின்றனர். காங்கிரஸ் எதிர்ப்பால் பா.ஜனதா மகிழ்ச்சி அடைந்துள்ளது" என்றார்.
Related Tags :
Next Story