திருச்சியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர்கள் வழங்கினர்


திருச்சியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 3 Jan 2021 7:04 AM IST (Updated: 3 Jan 2021 7:04 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.

மலைக்கோட்டை,

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் 2020-2021-ம் ஆண்டுக்கு 24 ஆயிரத்து 587 மாணவ-மாணவிகளுக்கு ரூ.9 கோடியே 68 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. இதில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, மணப்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10,755 மாணவர்கள், 13,832 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.முதற்கட்டமாக 41 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி தெப்பக்குளம் பி‌‌ஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கினார்.

அமைச்சர்கள் வழங்கினர்

அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்கள். அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், ‘‘தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 14 வகையான உபகரணங்களை வழங்கி வருகிறார். கல்வித்துறையிலும் தமிழக அரசு மிகப்பெரிய சாதனைகளை ஆற்றியுள்ளது’’ என்றார்.

இதில் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் வரவேற்று பேசினார். முடிவில் திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் பாரதி விவேகானந்தன் நன்றி கூறினார்.

Next Story