பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆவின் நெய் வினியோகம்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு


பழனி மலைக்கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்த காட்சி
x
பழனி மலைக்கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்த காட்சி
தினத்தந்தி 3 Jan 2021 3:26 AM GMT (Updated: 3 Jan 2021 3:26 AM GMT)

பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆவின் நெய் வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.

சாமி தரிசனம்
முருக பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று வந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு அவர் சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பிறகு நடந்த பூஜையில் கலந்து கொண்டு முருகப்பெருமானை அவர் தரிசனம் செய்தார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பால்வளத்துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் கொள்முதல் செய்த பாலுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்படும். தமிழக அரசு வழங்குகிற பொங்கல் பரிசு தொகுப்போடு சேர்த்து 100 மில்லி ஆவின் நெய்யும் வழங்கப்படும்.

எம்.ஜி.ஆர். ஆட்சி
எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சி தான் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்க முடியும். பழனி முருகன் கோவில் சிலையை செய்த சித்தர் போகரை, பல்லாயிரம் ஆண்டுகள் ஆனபிறகும் மறக்காமல் மக்கள் வழிபடுகின்றனர்.

இதேபோல் ஏழை மக்களுக்காகவே வாழ்ந்த எம்.ஜி.ஆரை மறக்காமல், அரசியலுக்கு வருகிற அனைவரும் அவரது ஆட்சி அமைப்போம் என்று தான் சொல்வார்கள். கருணாநிதி ஆட்சி அமைக்கிறோம் என்று சொல்ல மாட்டார்கள். எம்.ஜி.ஆரை விமர்சிப்பவர்கள் அடிச்சுவடு இல்லாமல் போய் விடுவார்கள்.

தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி
நடிகர் ரஜினிகாந்தை போல வெளிப்படைத்தன்மை உடைய நல்ல மனிதர் யாரும் இல்லை. உடல்நிலை மற்றும் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு அவர் அரசியலில் இருந்து விலகுவதாக எடுத்த முடிவு மனதார ஏற்க கூடியது.

ஆன்மிகத்தை விமர்சனம் செய்து, கேலியும் கிண்டலும் செய்யும் தி.மு.க.வுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் எக்காலத்திலும் வாக்களிக்க மாட்டார்கள். அ.தி.மு.க.வை குற்றம்சாட்டி கவர்னரிடம் மனு கொடுத்த தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள். இனி தி.மு.க ஆட்சிக்கு வரவே வராது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story