பைக்காரா அணையில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
பைக்காரா அணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
பைக்காரா படகு இல்லம்
தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். இங்கு நிலவும் குளு, குளு கால நிலையை அனுபவித்தும், விடுமுறையை கழித்தும் செல்கின்றனர்.
இந்த நிலையில் ஊட்டி அருகே உள்ள பைக்காரா படகு இல்லத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் பைக்காரா அணையின் இயற்கை அழகை காட்சி மாடத்தில் நின்றபடி கண்டு ரசித்தனர். 100 அடி கொள்ளளவில் 70 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்படாததால் பைக்காரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து இல்லை. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.
புலியை ரசித்தனர்
எனினும் அணையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். குறிப்பாக தண்ணீரை கிழித்துக்கொண்டும், பீய்ச்சி அடித்தபடியும் வேகமாக படகில் செல்வது சுற்றுலா பயணிகளுக்கு பிரமிப்பாக இருந்தது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவே பைக்காரா அணை உள்ளதால், அங்கு சமீபத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்யும்போது கரையோரத்தில் புலி ஒன்று தென்பட்டது. அது அணையில் தண்ணீர் குடித்துவிட்டு வனப்பகுதிக்குள் ஓடுவதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து ரசித்தனர். 8 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகில் சவாரி செய்ய ரூ.815, 10 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகில் சவாரி செய்ய ரூ.935, 2 அல்லது 3 இருக்கைகள் கொண்ட அதிவேக படகில் சவாரி செய்ய ரூ.840 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதேபோன்று பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம் மற்றும் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.ஊட்டி-கூடலூர் சாலையில் பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா போன்ற இடங்களில் சாலையோரத்தில் அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 5 ஆயிரத்து 967 பேர் வருகை தந்து இருந்தனர்.
Related Tags :
Next Story