இறந்தவர்களின் பிணத்தை வயல்கள் வழியாக தூக்கி சென்று புதைக்கும் அவலநிலை: சுடுகாட்டு பாதை வசதி ஏற்படுத்தி தரப்படுமா? சோமந்தாங்கல் கிராம மக்கள் கோரிக்கை


இறந்தவர்களின் பிணத்தை வயல்கள் வழியாக தூக்கி சென்று புதைக்கும் அவலநிலை: சுடுகாட்டு பாதை வசதி ஏற்படுத்தி தரப்படுமா? சோமந்தாங்கல் கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Jan 2021 3:46 PM IST (Updated: 3 Jan 2021 3:46 PM IST)
t-max-icont-min-icon

இறந்தவர்களின் பிணத்தை நெல் வயல்கள் வழியாக தூக்கி சென்று புதைக்கும் அவல நிலை உள்ளது. எனவே சுடுகாட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கண்ணமங்கலத்தை அடுத்த சோமந்தாங்கல் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகில் 5:புத்தூர் ஊராட்சியில் சோமந்தாங்கல் கிராமம் உள்ளது. கிராமத்தில் இறந்தவர்களின் பிணத்தைத் தூக்கி சென்று புதைக்க, மயானப்பாதை இல்லை. இதனால் நெல் வயல்கள் வழியாக பிணத்தைத் தூக்கி செல்லும் அவலநிலை உள்ளது.

இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் ேசர்ந்த 9-வது வார்டு உறுப்பினர் சுந்தரேசன் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

5:புத்தூர் ஊராட்சியில் அடங்கிய சோமந்தாங்கல் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எங்கள் கிராமத்தின் கிழக்கில் சுமார் 500 மீட்டர் தொலைவில் இறந்தவர்களை புதைக்க மயானம் உள்ளது. ஆனால் மயானத்துக்குச் செல்லும் பாதை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் பிணத்தை நெல் வயல்கள் வழியாக தூக்கி சென்று புதைக்கும் அவலநிலை உள்ளது.

மயானபாதை அமைத்துத் தர வேண்டும் எனப் பலமுறை ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியும், மயானப்பாதையில் நிலம் வைத்துள்ள சிலர் இடத்தை தானமாக வழங்க முன் வந்தும், ஒருவர் மட்டும் தர மறுக்கிறார். நெல் வயல் வழியாக பிணத்தைத் தூக்கி சென்று புதைக்க அவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

கடந்த 1-ந்தேதி எங்கள் கிராமத்தில் சின்னக்குழந்தை என்ற லட்சுமி (வயது 80) என்ற மூதாட்டி உடல் நலப் பாதிப்பால் திடீரென இறந்து விட்டார். அவரது பிணத்தை, உறவினர்கள் உதவியோடு நெல் வயல்கள் வழியாக தூக்கி சென்று புதைத்தனர். எனவே இந்த அவலநிலையைப் போக்க எங்கள் கிராமத்தில் மயானத்துக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர மாவட்ட கலெக்டர் மூலம் வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story