ஏலகிரிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


ஏலகிரிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 Jan 2021 4:08 PM IST (Updated: 3 Jan 2021 4:08 PM IST)
t-max-icont-min-icon

ஏலகிரிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் காணப்படுகிறது. பொருட்கள் விற்பனை ஜோராக நடப்பதால் மலைவாழ் மக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலை ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. ஏலகிரிமலையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஏலகிரிமலை கடல் மட்டத்தில் இருந்து 1048.5 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

இங்கு சீேதாஷ்ண நிலை கோடைக்காலத்தில் 34 டிகிரி வெப்பநிலையிலும், குளிர்காலத்தில் 11 டிகிரி வெப்பநிலையிலும் காணப்படும். இது, தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஏலகிரிமலையில் படகுத்துறை, இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, கோவில்கள் உள்பட பல்வேறு இடங்கள் சுற்றி பார்க்கக்கூடியவையாகும்.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட சுற்றுலா தலங்கள், தமிழக அரசின் பல்வேறு தளர்வுகளால் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 8 மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் ஏலகிரிமலை சுற்றுலா தலம் திறக்கப்பட்டுள்ளது.

ஏலகிரிமலைக்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ.பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால், மலையடிவாரத்தில் போலீசார் தீவிர சோதனை செய்து, இ.பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டும் ஏலகிரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏலகிரிமலையில் பல்வேறு இடங்களில் வளர்ச்சித்திட்டப்பணிகள் நடந்து வருவதால் சுற்றிப் பார்க்கக் கூடிய இடங்கள் முழுமை பெறாமல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 8 மாதங்களாக ஏலகிரிமலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள், வியாபாரிகள் சுற்றுலா பயணிகளின் வரத்து இல்லாமல் வியாபாரமின்றி வருவாய் இழந்து சிரமப்பட்டு வந்தனர். தற்போது ஏலகிரிமலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மலைவாழ் மக்கள், வியாபாரிகள் தங்களின் கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏலகிரிமலையில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் அதிகம் விளைகின்றன. சீதா பழம், ஊட்டி ஆப்பிள், ஸ்டிராபெரி, ஸ்டார் புரூட்ஸ் ஆகிய பழங்கள் மற்றும் மைசூரு, கோவை, ஊட்டி ஆகிய ஊர்களில் இருந்து பலவகையான பழ வகைகள் ஏலகிரிமலைக்கு கொண்டு வரப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் விரும்பி சாப்பிட தூண்டும் பழவகைகள், சாக்லேட்டுகள் ஆகியவை வியாபாரம் செய்யப்படுகின்றன.

தற்போது ஏலகிரிமலைக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மலைவாழ் மக்கள், வியாபாரிகள் பல்வேறு வகையான பொருட்களை அதிகளவில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஆங்கில புத்தாண்டையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால், பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தங்களின் குழந்தைகள், குடும்பத்துடன் ஏலகிரிமலைக்கு வந்து இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, படகுத்துறை ஆகியவற்றை கண்டு களித்து பொழுதைப் போக்கி வருகின்றனர்.

குறிப்பாக படகுத்துறையில் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், செல்பி எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் ஏலகிரிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், சங்கர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story