வேலூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 8,920 பேர் எழுதுகின்றனர் - 31 மையங்களில் இன்று நடக்கிறது
வேலூர் மாவட்டத்தில் இன்று 31 மையங்களில் குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் குரூப்-1 முதல் நிலை தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 31 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 8 ஆயிரத்து 920 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இது தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் தலைமை தாங்கினார். தேர்வு அலுவலர்கள் சந்திரசேகரன், மணிகண்டன், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.என்.பி.எஸ்.சி. தாசில்தார் விஜயன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் போலீசார், மின்சார வாரியம், போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், தேர்வு கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:-
ஒவ்வொரு தேர்வு கூடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு அனைவரையும் பரிசோதனை செய்தபிறகே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அனைத்து தேர்வு மையங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.
தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு எழுதுபவர்களின் உடல் வெப்ப அளவு பரிசோதித்து அனுப்பப்பட உள்ளதால் காலை 9 மணிக்குள் வரவேண்டும். கருப்பு நிற பந்து முனை பேனா மற்றும் ஹால்டிக்கெட் ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும். காலை 9.15 மணிக்கு மேல் வருபவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். செல்போன், கால்குலேட்டர் போன்ற எந்தவித எலக்ட்ரானிக் பொருட்களையும் எடுத்து வர அனுமதி கிடையாது.
இவ்வாறு கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story