கிருஷ்ணகிரி சிறப்பு மருத்துவ முகாமில் 1,457 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் - கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 1,457 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமையம் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார்.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் 21 வகையான மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 309 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கி கலெக்டர் பேசியதாவது:-
கடந்த 17-ந் தேதி முதல் 10 ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு எலும்பு முறிவு, கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்டவை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, ஊத்தங்கரை ஒன்றியத்தில் 134, மத்தூரில் 114, பர்கூரில் 136, காவேரிப்பட்டணத்தில் 119, வேப்பனப்பள்ளியில் 87, சூளகிரியில் 120, ஓசூரில் 305, அஞ்செட்டியில் 72, கெலமங்கலத்தில் 131 மற்றும் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 239 பேர் என மொத்தம் 1,457 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சூசைநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், சர்தார், வட்டார கல்வி அலுவலர்கள் வேதா, மரியரோஸ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோதண்டபாணி, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story