நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்: தும்பலஅள்ளி அணையில் மூழ்கி தொழிலாளி சாவு


நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்: தும்பலஅள்ளி அணையில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 3 Jan 2021 7:50 PM IST (Updated: 3 Jan 2021 7:50 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது தும்பலஅள்ளி அணையில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

காரிமங்கலம்,

காரிமங்கலம் அருகே உள்ள சேவன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நைனா. இவருடைய மகன் சிலம்பரசன் (வயது 30). இவர் அங்குள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி கமலா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் சிலம்பரசன் தும்பலஅள்ளி அணையில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அங்கு அவர் மண் எடுத்து வருவதாக கூறி தண்ணீரில் மூழ்கியவர் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிலம்பரசனை தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலம்பரசன் அணையில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் குளிக்க சென்ற தொழிலாளி அணையில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story