மோகனூர் பகுதியில், பப்பாளியில் நோய் தாக்குதல் - விவசாயிகள் கவலை
மோகனூர் பகுதியில் பப்பாளியில் நோய் தாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மோகனூர்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் ராசிபாளையம், ஒருவந்தூர், குமரிபாளையம், ஆரியூர், பெரமாண்டம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களில் பப்பாளி கன்றுகள் நட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பப்பாளியில் நோய் தாக்கியதால் இரண்டு வருடங்கள் வரை இருக்க வேண்டிய பப்பாளி இரண்டே மாதங்களில் அழிக்கும் அவல நிலை இருப்பதால் பப்பாளி பயிரிட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து மோகனூர் அருகே உள்ள ராசிபாளையம் ஊராட்சியை சேர்ந்த முருகேசன் (வயது 49) என்ற விவசாயி கூறும் போது, எனக்கு 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 3 பகுதியாக பப்பாளி விவசாயம் செய்து உள்ளேன். பப்பாளியின் ஆயுட்காலம் 2 வருடம். பப்பாளி நடவு செய்த 6 மாதத்தில் விளைச்சல் கொடுக்கும்.
சமீபகாலமாக நோய் தாக்கத்தால் பப்பாளி மரங்கள் முற்றிலும் வளர்ச்சி இல்லாமல் போனது. ஆனால் மற்ற பயிர்களுக்கு வழங்கப்படும் காப்பீடு பப்பாளிக்கு இல்லை என விவசாயத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. மற்ற பயிர்கள்போல் இதற்கும் காப்பீடு இருந்திருந்தால் நஷ்டம் ஏற்படாமல் தப்பித்திருக்கலாம். ஒரு ஏக்கர் பப்பாளியில் 900 கன்றுகள் நடலாம். காய்ப்புக்கு வரும் வரை ஒரு செடி குறைந்தபட்சம் ரூ.50 வீதம் ஒரு ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவாகும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2 ஏக்கரில் உள்ள 11 மாதம் ஆன பப்பாளியிலும், 2 மாதங்களுக்கு முன்பு 1 ஏக்கர் 50 சென்டில் நடப்பட்ட பப்பாளியிலும் கொடிய நோய் தாக்கத்தால் செடிகள் நன்றாக வளரவில்லை. இந்த நோய்க்கு பல்வேறு வகையான மருந்துகளை அடிக்க ரூ.30 ஆயிரம் செலவானது. ஆனாலும் எந்த பயனும் இல்லை. நோயின் தாக்கம் குறையவில்லை.
எனவே 2 வருடம் விவசாயம் செய்ய வேண்டிய பயிரை இரண்டே மாதங்களில் அழிப்பது வேதனையாக உள்ளது. அரசு இது சம்பந்தமாக விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், அத்துடன் பப்பாளிக்கு காப்பீடு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என கூறினார்.
இதேபோல மோகனூர் பகுதியில் மேலும் சில இடங்களில் பப்பாளியில் நோய் தாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story