திருப்புவனம் அருகே 7 அடி உயர முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பெண் சாமியார்


திருப்புவனம் அருகே 7 அடி உயர முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பெண் சாமியார்
x
தினத்தந்தி 3 Jan 2021 10:54 PM IST (Updated: 3 Jan 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே 7 அடி உயர முள் படுக்கையில் படுத்து பெண் சாமியார் பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார்.

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக பெண் சாமியார் நாகராணி அம்மையார் இருந்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை விழா நடைபெறுவது வழக்கம். அப்போது நாகராணி, 48 நாட்கள் விரதம் இருந்து முள் படுக்கை மீது நின்றுகொண்டும், ஆடியபடியும் பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நேற்று காலை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதையொட்டி சுமார் 7 அடி உயரத்திற்கு முள் படுக்கை அமைக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் சாமியார் நாகராணியிடம் அருள்வாக்கு பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் முள் படுக்கையை சுற்றி நின்றிருந்தனர்.

அப்போது நாகராணி, அந்த முள் படுக்கையில் நின்றபடியும், சாமியாடியபடியும், முள் படுக்கையில் படுத்த நிலையிலும் பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். அதன் பின்னர் அந்த முள் படுக்கையில் இருந்து கீழே இறங்கி வந்த நாகராணிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Next Story