திருச்சியில் இருந்து காரைக்குடி வழியாக ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில் - நாளை முதல் இயக்கப்படுகிறது
மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் திருச்சியில் இருந்து காரைக்குடி வழியாக ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில் நாளை(4-ந்தேதி) முதல் இயக்கப்படுகிறது.
மதுரை,
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் 60 சதவீத ரெயில்கள் மட்டும் சிறப்பு ரெயில்களாக இயக்கப்படுகிறது.
இதற்கிடையே, திருச்சியில் இருந்து ராமேசுவரத்துக்கும், நெல்லையில் இருந்து பாலக்காட்டுக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, நாளை( 4-ந் தேதி) முதல் திருச்சியில் இருந்து காலை 7 மணிக்கு ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06849) மதியம் 12.15 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் அன்றைய தினம் ராமேசுவரத்தில் இருந்து மதியம் 2.35 மணிக்கு திருச்சிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06850) இரவு 8 மணிக்கு திருச்சி ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயிலில் 12 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி முன்பதிவு பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ரெயில், குமாரமங்கலம், புதுக்கோட்டை, திருமயம், கோட்டையூர், காரைக்குடி, தேவக்கோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல, நெல்லையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு நாளை( 4-ந் தேதி) முதல் பாலருவி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06791) நெல்லையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு பாலக்காட்டுக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் வருகிற 5-ந் தேதி பாலக்காட்டில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06792) பாலக்காட்டில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு நெல்லை ரெயில்நிலையம் வந்தடைகிறது. இந்த ரெயில் சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, கொல்லம், பெரிநாடு, முன்னோற்றுற்று, சாஸ்தான்கோட்டை, கருநாகப்பள்ளி, ஓச்சிரா, காயங்குளம், மாவேலிக்கரை, செரியநாடு, செங்கனூர், திருவல்லா, செங்கனச்சேரி, கோட்டயம், குருப்பன்துறை, வைக்கம்ரோடு, பிரவம்ரோடு, முலன்றுருட்டி, திருப்புணித்துறை, எர்ணாகுளம் டவுண், ஆலுவா, திருச்சூர், ஒற்றப்பாலம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் நெல்லையில் இருந்து புறப்படும் ரெயில் பாவூர்சத்திரம், கிளிக்கொல்லூர் ஆகிய ரெயில் நிலையங்களிலும், பாலக்காட்டில் இருந்து வரும் ரெயில் கீழக்கடையம் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும். ரெயிலில், 4 இரண்டாம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
Related Tags :
Next Story