திருமணத்துக்கு முந்தைய நாள் மணமகன் ஓட்டம்: இளம்பெண்ணை கரம்பிடித்த அரசு பஸ் கண்டக்டர்


திருமணத்துக்கு முந்தைய நாள் மணமகன் ஓட்டம்: இளம்பெண்ணை கரம்பிடித்த அரசு பஸ் கண்டக்டர்
x
தினத்தந்தி 4 Jan 2021 3:32 AM IST (Updated: 4 Jan 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

திருமணத்துக்கு முந்தைய நாள் மணமகன் ஓடியதால், இளம்பெண்ணை அரசு பஸ் கண்டக்டர் கரம் பிடித்த சம்பவம் சிக்கமகளூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு, 

சிக்கமகளூரு மாவட்டம் பைதி பைந்தூர்நாலா கிராமத்தை சேர்ந்தவர் நவீன். இவருக்கும், சிருங்கேரியை சேர்ந்த சிந்து என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அவர்களின் திருமணம் சிருங்கேரியில் நேற்று நடக்க இருந்தது. நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிலையில், நவீன் வேறொரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.

நவீனுக்கு திருமணம் நடப்பதை அறிந்து கொண்ட அந்த பெண், நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்துக்கு வந்துள்ளார். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அவர் நவீனை தனியாக சந்தித்து பேசியுள்ளார். அப்போது, என்னை ஏமாற்றிவிட்டு திருமணம் செய்துகொண்டால், நாளை காலை மண்டபத்துக்கு வந்து அனைவர் முன்னிலையிலும் உண்மையை கூறி திருமணத்தை நிறுத்திவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

இதனால் நவீன் பயந்து போனார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவே நவீன் திருமண மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார்.

இந்த நிலையில் நேற்று காலை திருமணத்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் திருமணத்துக்காக மண்டபத்துக்கு வந்தனர். இந்த நிலையில் தாலி கட்டும் நேரம் வந்தும் மணமகன் நவீன் மணமேடைக்கு வரவில்லை. மணமகள் மட்டும் தனியாக இருந்தார். அப்போது தான் மணமகன் நவீன், திருமண மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.

இதனால் இருவீட்டாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பெண் வீட்டார் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு உண்டானது. அந்த சமயத்தில் திருமணத்துக்கு வந்திருந்த சிருங்கேரி தாலுகா நந்தி கிராமத்தை சேர்ந்த சந்துரு என்பவர் சிந்துவை திருமணம் செய்துகொள்வதாக கூறி முன்வந்தார். இதனால் பெண் வீட்டார் நிம்மதி அடைந்தனர்.

இதையடுத்து அதே முகூர்த்தத்தில் மணப்பெண் சிந்துவை, சந்துரு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு வந்த அனைவரும் மணமக்களை வாழ்த்தி சென்றனர். திடீர் மாப்பிள்ளையான சந்துரு, சிக்கமகளூருவில் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story