யாதகிரி அருகே காதலை கைவிட மறுத்த வாலிபர் ஆணவக்கொலை இளம்பெண்ணின் உறவினர்கள் வெறிச்செயல்
யாதகிரி அருகே காதலை கைவிட மறுத்த வாலிபரை இளம்பெண்ணின் உறவினர்கள் ஆணவக் கொலை செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரு,
யாதகிரி மாவட்டம் சகாப்புரா டவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சந்தோஷ் (வயது 22). இவரும் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2 பேரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும், இளம்பெண் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காதலை கைவிடவும் வற்புறுத்தி வந்தனர். ஆனாலும் இளம்பெண்ணும், சந்தோசும் தொடர்ந்து காதலித்து வந்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சந்தோஷ் பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் சகாப்புரா புறநகர் பகுதியில் சந்தோஷ் இறந்து கிடந்தார். அவரது உடலின் அருகே விஷபாட்டிலும் கிடந்தது.
இதுபற்றி அறிந்த சந்தோசின் குடும்பத்தினர் அங்கு சென்று சந்தோஷ் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற சகாப்புரா டவுன் போலீசாரும் சந்தோசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் காதலை கைவிட மறுத்ததால் சந்தோசை, இளம்பெண்ணின் உறவினர்கள் அடித்து கொலை செய்ததும், சந்தோஷ் தற்கொலை செய்தது போல போலீசாரை நம்ப வைக்க உடலின் அருகே விஷ பாட்டிலை வீசி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து சகாப்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story