சுய நினைவை இழந்ததால் பரபரப்பு மத்திய மந்திரி சதானந்தகவுடாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு
சித்ரதுர்காவில் மத்திய மந்திரி சதானந்தகவுடா வுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவர் ஆம்புலன்சில் பெங்களூருவுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு,
மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரியாக பணியாற்றி வருபவர் சதானந்தகவுடா. அவர் நேற்று சித்ரதுர்காவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மதியம் 2 மணி அளவில் உணவுக்கு செல்லும் முன்பு அவர் திடீரென மயங்கி விழுந்தார். சுய நினைவை இழந்தார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், உடனே அவரை சித்ரதுர்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு சர்க்கரை அளவு குறைந்து இருப்பதாக தெரிவித்தனர். உடனே அவருக்கு டாக்டர்கள் சர்க்கரை அளவை சரிசெய்யும் சிகிச்சையை தொடங்கினர்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் சுய நினைவுக்கு வந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சதானந்தகவுடா ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டார். அவர் அழைத்து வரப்பட்ட ஆம்புலன்சுக்கு பூஜ்ஜிய போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். முதல்-மந்திரி எடியூரப்பா, மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட அக்கட்சி தலைவர்கள் செல்போன் மூலம் பேசி சதானந்தகவுடாவின் உடல் நிலையை கேட்டறிந்தனர். பெங்களூருவில் உள்ள அவரது குடும்பத்தினரும் செல்போன் மூலம் சதானந்தகவுடாவின் உடல்நிலை குறித்து விவரங்களை கேட்டனர். பயப்படும் அளவுக்கு சதானந்தகவுடாவின் நிலை மோசமாக இல்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களும் தெரிவித்தனர்.
சித்ரதுர்காவில் சதானந்தகவுடாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிறகு பா.ஜனதாவை சேர்ந்த எம்.சந்திரப்பா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், "சதானந்தகவுடாவுக்கு சர்க்கரை அளவு குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக உள்ளார். பழச்சாறு குடித்தார். குடும்பத்தினருடன் பேசினார். அவருக்கு இதய செயல்பாடு குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேல் சிகிச்சைக்காக சதானந்தகவுடா பெங்களூருவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்" என்றார்.
மத்திய மந்திரி சதானந்தகவுடா திடீரென மயங்கி விழுந்தது, பா.ஜனதாவினரிடையே பெரும் பரபரப்பையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது. அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து பா.ஜனதா தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே இருந்த ஆதங்கம் நீங்கியது.
Related Tags :
Next Story