பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் குரூப்-1 தேர்வினை 2,619 பேர் எழுதினர் 2,269 பேர் வரவில்லை


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் குரூப்-1 தேர்வினை 2,619 பேர் எழுதினர் 2,269 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 4 Jan 2021 4:22 AM IST (Updated: 4 Jan 2021 4:22 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடந்த குரூப்-1 தேர்வை 2,619 பேர் எழுதினர். 2,269 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அரியலூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-1 (குரூப்-1) தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வினை எழுத பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 2,489 பேரும், அரியலூர் மாவட்டத்தில் இருந்து 2,399 பேரும் என மொத்தம் 4,888 பேர் விண்ணப்பித்திருந்தனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் குரூப்-1 தேர்வு தலா 9 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

மையத்திற்கு தேர்வு எழுத வந்தவர்களை காலை 9 மணிக்கு முன்னதாகவே அறை கண்காணிப்பாளர்கள் பலத்த சோதனையிட்டு தேர்வு அறைக்குள் செல்ல அனுமதித்தனர். மேலும் தேர்வர்கள் தேர்வு அறைக்குள் மின்சாதன பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணிக்கு முடிந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வினை 1,271 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 1,348 பேரும் என மொத்தம் 2,619 பேர் எழுதினர். இதில் பார்வையற்றவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் உதவியாளர் உதவியுடன் தேர்வு எழுதினர்.

ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் 1,218 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 1,051 பேரும் என மொத்தம் 2,269 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரியலூர் மாவட்டத்தில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் நடந்த தேர்வை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வினை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடந்த குரூப்-1 தேர்வினை தலா 9 கண்காணிப்பு குழுக்களும், தலா 2 நடமாடும் குழுக்களும், தலா 1 பறக்கும் படை குழுவும் கண்காணித்தனர். தோ்வு தொடங்குவதற்கு முன்னதாக தேர்வு மையங்கள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்யப்பட்டு, தேர்வர்கள் அனைவரின் உடல் வெப்பநிலையும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் கண்டறியப்பட்டது.

Next Story