புதுவையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைவது உறுதி நடிகை கு‌‌ஷ்பு பேச்சு


புதுவையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைவது உறுதி நடிகை கு‌‌ஷ்பு பேச்சு
x
தினத்தந்தி 4 Jan 2021 5:21 AM IST (Updated: 4 Jan 2021 5:21 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்று நடிகை கு‌‌ஷ்பு கூறினார்.

புதுச்சேரி, 

பா.ஜ.க. சார்பில் நடந்த தாமரை எழுச்சி யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் நடிகை கு‌‌ஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கு கூடியிருக்கும் மக்களின் எழுச்சியை பார்க்கும் போது புதுவையில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை. பிரதமர் மோடியின் சிறப்பான திட்டங்களை உங்களுக்கு எடுத்து கூறுவதற்கு தான் நான் இங்கு வந்துள்ளேன். தமிழகம், புதுவையில் பா.ஜ.க. வெற்றி பெற்று விடுமோ என்ற பயம் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.விற்கு வந்துவிட்டது. நான் புதுவைக்கு எத்தனையோ முறை வந்துள்ளேன். அப்போது புதுவை அழகாக இருந்தது. மக்கள் சந்தோ‌‌ஷமாக இருந்தனர். எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது மக்கள் வேதனையாக இருப்பது தெரிகிறது. காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியில் புதுவை சீரழிந்துள்ளது.

மக்கள் வேதனையில் உள்ளனர். இதற்கு காரணம் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் அதிகரித்துள்ளது. புதுவை மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ரே‌‌ஷன்கடைகள் மூடப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் வெளியே சென்றால் அவர்கள் எப்போது வீட்டிற்கு வருவார்கள் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். போதைப்பொருட்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாக புதுவை உள்ளது.

ஒரே நாடு ஒரே ரே‌‌ஷன்கார்டு திட்டத்தின் மூலம் சாதி, மத, பாகுபாடு, ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் அரிசி, கோதுமை போன்ற ரே‌‌ஷன் பொருட்களை பெற முடியும். ஆனால் புதுவையில் அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. காங்கிரஸ், தி.மு.க.வினர் பா.ஜ.க. மீது தவறான பிரசாரம் செய்கின்றனர். பா.ஜ.க. மேல்சாதி காரர்களுக்கு சொந்தம் என்று. ஆனால் பா.ஜ.க.வில் சிறுபான்மையினர் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாகவும், பல முக்கிய பொறுப்புகளிலும் உள்ளனர். நான் கூட சிறுபான்மையினர் தான்.

விவசாயிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் தானாக கொண்டு வரப்படவில்லை. 1½ லட்சம் விவசாயிகளிடம் கலந்து பேசி ஆலோசனை நடத்திய பின்னர் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. காங்கிரஸ், தி.மு.க.வும் எதிர்க்கட்சிகள் என்பதற்காக இதனை எதிர்க்கின்றனர். 1970-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 5 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவில் இல்லையா?

திட்டங்களை செயல்படுத்தாத முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னரை குற்றம் சாட்டி வருகிறார். மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள் வங்கி கணக்கில் நிதி செலுத்தப்படுகிறது. மக்கள் அனைவரும் சொந்த வீட்டில் வாழும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

எனது அரசியல் பயணம் தி.மு.க.வில் தான் தொடங்கியது. அப்போது தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி எதிர்க்கட்சி தலைவர்களை மரியாதையுடன் பேச வேண்டும் என்பார். ஆனால் தற்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எடுபிடி முதல்-அமைச்சர் என்று மரியாதை குறைவாக பேசுகிறார். உதயநிதி ஸ்டாலின் கூட்டத்திற்கு அனுமதியில்லை என்று போலீசார் தடுத்தபோது, அவர் அங்கு இருந்த போலீசாரிடம், உங்கள் பெயர் எனக்கும் தெரியும், இன்னும் 5 மாதத்தில் எங்கள் ஆட்சி தான். அப்போது நான் உங்களை என்ன செய்கிறேன் என்று பாருங்கள் என்று மிரட்டியுள்ளார். தாத்தா எங்கே? பேரன் எங்கே?

கொரோனா காலத்தில் உலக அளவில் சிறப்பாக செயல்பட்ட தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டில் ஊழல், முறைகேடு குறித்து யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் காங்கிரஸ், தி.மு.க.விற்கு அதனை பற்றி பேச அருகதையில்லை. ஊழல் என்றால் என்ன என்று நாட்டிற்கு எடுத்து காட்டியது காங்கிரஸ், தி.மு.க. தான்.

காங்கிரஸ், தி.மு.க.வின் காலம் முடிந்து விட்டது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் புதுவையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. தாமரை மலர்ந்தே தீரும். இனியும் நாம் அடிமைகள் இல்லை. மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. பெண்களை பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாழ வைப்பது பா.ஜ.க. தான். எனவே மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். நான் தேர்தல் பிரசாரத்திற்கும் புதுவைக்கு வருவேன். வெற்றிக்கூட்டத்திற்கும் வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story