தமிழகத்தில் பா.ம.க.வை அரியணையில் ஏற்றி 20 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவோம்


தமிழகத்தில் பா.ம.க.வை அரியணையில் ஏற்றி 20 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவோம்
x
தினத்தந்தி 4 Jan 2021 6:07 AM IST (Updated: 4 Jan 2021 6:07 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பா.ம.க.வை அரியணையில் ஏற்றி 20 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவோம் என்று தஞ்சையில் நடந்த வன்னியர் சங்க முப்பெரும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் ஆகியோரின் பிறந்த நாள் விழா, வன்னியர் சங்க 40 -வது ஆண்டு விழாஆகிய முப்பெரும் விழா தஞ்சையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், செயலாளர் ராம்குமார், பா.ம.க. மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மதிவிமல் வரவேற்றார்.

கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி, துணைத்தலைவர்கள் சுப்பிரமணியன், பாசம் சக்திவேல், தங்க.அய்யாசாமி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர்கள் வெங்கட்ராமன், ராதாகிரு‌‌ஷ்ணன், பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் ராமமுத்துக்குமார், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட தலைவர் ரமே‌‌ஷ், நிர்வாகிகள் அரசூர் ஆறுமுகம், தனவேந்தன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள், உழவர் பேரியக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

பு.தா.அருள்மொழி பேச்சு

கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா,அருள்மொழி பேசுகையில், ‘‘தமிழகத்தில் யார் முதல்வராக வரவேண்டும் என்பதை கிராமப்புறங்களில் பரவிக்கிடக்கின்ற வன்னியர்கள் தான் சொல்ல வேண்டும். யாரோ சில அரசியல் வியாபாரிகள் இவர் தான் முதல்வர் என இனி யாரும் சொல்ல முடியாது. எங்களது தேவையை பூர்த்தி செய்ய முடியாத யாரும் இனி எங்களுக்கு தலைவராக ஆகமுடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த இளைஞர் கூட்டம் எழுச்சி பெற வேண்டும்.

போராட்டம்

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடர் போராட்டங்கள் நடைபெறுகிறது. வருகிற 7 -ந் தேதி (வியாழக்கிழமை) நகராட்சி அலுவலகங்கள் முன்பாகவும், 21-ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பாகவும் போராட்டம் நடத்தவுள்ளோம். இம்மாத இறுதிக்குள் இதற்கான ஆணை வெளியிடாவிட்டால் இம்மாதம் இறுதியில் தமிழகத்தின் அனைத்து இயக்கமும் முடக்கப்படும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நல்லா இல்லை. மக்கள் நலன் பாதுகாப்பாக இல்லை. இதுபோன்ற நிலைகள் மாற்றப்பட வேண்டுமானால் வன்னியர்கள் தான் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும். கமல், பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியினர் பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்க பார்க்கிறார்கள். வன்னியர்களுக்கு அவர்களுக்கான உரிமைகள் வழங்கும் கட்சியோடு தான் கூட்டணி வைக்கப்படும்’’ என்றார்.

20 சதவீத இட ஒதுக்கீடு

விழாவில் தமிழகத்தில் பா.ம.க.வை அரியணையில் ஏற்றி டாக்டர் அன்புமணிராமதாஸ் கைகளில் அதிகாரத்தை பெற்றுத்தருவோம் என்ற எண்ணத்துடன் டாக்டர் ராமதாஸ் வழியில் ஒருங்கிணைந்து நின்று வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத்தீர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநகர செயலாளர் ராஜாராமன் நன்றி கூறினார்.

Next Story